பதிவு செய்த நாள்
28 பிப்2015
02:14

‘மத்திய அரசு, சரக்கு கட்டணத்தை, 10 சதவீதம் உயர்த்துவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயராது; விலை உயரும் என்பதெல்லாம் கற்பனைக் கதை’ என, வர்த்தகர்கள் உறுதிபட கூறினர்.ரயில்வே பட்ஜெட்டில், சரக்குகளுக்கான கட்டணம், அதிகபட்சம், 10 சதவீதம் வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத கட்டண உயர்வால் சிமென்ட், இரும்பு பொருட்கள் மட்டுமின்றி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என, பரபரப்பாக பேசப்படுகிறது. விலைவாசி உயரும் என, எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், ‘10 சதவீத கட்டண உயர்வால், விலை நிச்சயம் உயராது; விலை உயரும் என்பதெல்லாம் கற்பனைக் கதை’ என, வர்த்தகர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபிரகாசம் கூறியதாவது:உளுந்தம் பருப்பு, 100 கிலோ மூட்டை, 8,400 ரூபாய். வட மாநிலத்தில் இருந்து தமிழகம் கொண்டு வர, ஒரு மூட்டைக்கான கட்டணம், 250 ரூபாய். மொத்தம், 8,650 ரூபாய் செலவாகிறது.பத்து சதவீத உயர்வால், 250 ரூபாயாக இருந்த கட்டணம், 25 ரூபாய் உயர்ந்து, 275 ரூபாயாக மாறும்; ஒரு மூட்டைக்கான மொத்த செலவு, 8,675 ரூபாயாக இருக்கும். 8,650 ரூபாய்க்கு, 25 ரூபாய் உயர்வது பெரிய விஷயம் அல்ல. இதை வைத்து, விலைவாசி உயரும், மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதெல்லாம் கற்பனைக் கதை.இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறுகையில், ‘‘சமையல் எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் துறைமுகங்களுக்கு வருகின்றன; ரயில்களில் கொண்டு வரப்படுவதில்லை. அப்படியே இருந்தாலும், கட்டணம் தான், 10 சதவீதம் உயர்கிறதே தவிர, உற்பத்தி பொருட்கள் விலை உயரவில்லை. இந்த விவகாரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிச்சயம் விலை உயராது,’’ என்றார்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|