பதிவு செய்த நாள்
08 ஜூன்2015
07:31

செல்வந்தராகும் வழிகளை விளக்கும் புத்தகங்களில், ‘தி ரிச்சஸ்ட் மேன் இன் பாபிலோன்’ புத்தகம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நிதித்துறை வல்லுனர்கள் பலரும் பரிந்துரைக்கும் புத்தகமாகவும் இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த, ஜார்ஜ் சாமுவேல் கிலாசன் எழுதிய இந்த புத்தகம், 1926ல் வெளியானது.
செல்வந்தராவதற்கான அடிப்படை வழிகளை, கிலாசன் இந்த புத்தகத்தில் விவரித்திருக்கிறார். வழக்கமான முறையில் இருந்து மாறுபட்ட, பண்டைக்கால செல்வ நகரமான பாபிலோனில் நடப்பது போன்ற கதைகள் மூலம், பணம் பெருகுவதற்கான அடிப்படை வழிகளை, பாபிலோன் பணக்காரர் எனும் நாயகன் மூலம் விவரித்துள்ளார். * 10 சதவீத மகத்துவம்: நீங்கள் கைநிறைய சம்பாதித்தாலும் சரி, குறைவாக சம்பாதித்தாலும் சரி, வருமானத்தில் 10ல் ஒரு பகுதியை உங்களுக்கு என எடுத்து வைக்கவும். ஒருவர் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை அவருக்கு என எடுத்து வைக்க துவங்குவதே, செல்வத்திற்கான முதல் படி. வருமானத்தை செலவு செய்வதற்கு முன், அதை சம்பாதித்தவர் தனக்குத்தானே பரிசு கொடுத்துக்கொள்ள வேண்டும். * செலவை குறைப்பது: நாம் அத்தியாவசிய தேவைகள் என கருதுவது, எப்போதுமே நம் வருமானத்திற்கு ஏற்ப வளர்ந்தபடி இருக்கும். நம் விருப்பங்களை அத்தியாவசிய தேவைகளாக நினைத்து குழப்பிக்கொள்ளக் கூடாது. எல்லாருக்கும் வருமானத்தை விட அதிக அளவில் ஆசைகள் இருக்கும். எல்லாவற்றுக்கும் வரம்பு இருப்பது போல, ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் வரம்பு இருக்க வேண்டும். * பெருகும் பணம்: நாம் ஈட்டிய பணம், நமக்காக உழைக்க வேண்டும். அதாவது, மேலும் பணத்தை தேடித்தர வேண்டும். இதன் மூலம் மேலும் வருவாய் பெருகி செல்வம் சேரும்.* செல்வத்தை காக்கவும்: தங்கத்தை (செல்வத்தை) பாதுகாக்காவிட்டால் அது காணாமல் போய்விடும். செல்வத்தை பெருக்க நினைக்கும்போது, அசலுக்கு மோசமில்லாத வகையில் முதலீடு செய்ய வேண்டும். அசலுக்கு ஆபத்து எனும்போது, அதிக வருவாயால் என்ன பயன்? * வீட்டில் முதலீடு: வருவாயில், செலவுக்காக உள்ள ஒன்பது பகுதிகளில், அத்தியாவசிய தேவையை பாதிக்காத வகையில் ஏதேனும் ஒரு பகுதியை மேலும் வருமானம் வரும் வகையில் முதலீடு செய்ய முடிந்தால், அதற்கேற்ப செல்வம் இன்னும் வேகமாக பெருகும். வாடகை வீட்டில் குடியிருப்பதை விட, சொந்த வீட்டில் வசிக்க வேண்டும். * எதிர்கால வருமானம்: குழந்தை பருவத்தில் இருந்து வயோதிகத்தை நோக்கி வாழ்க்கை செல்கிறது. இளமையில் பொருள் ஈட்டுவது போல, முதுமையில் ஈட்ட முடியாது. அந்த காலத்திற்கு இப்போதே தயாராக வேண்டும். ஏதாவது ஒரு வகையில் எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும். * மேலும் வருமானம்: ஒருவர் செய்து கொண்டிருக்கும் தொழிலில் மேலும் திறனை வளர்த்துக்கொண்டால் வருமானமும் அதிகரிக்கும். ஒருவர் கலைஞராக இருந்தால், மேலும் நுட்பம் கற்கலாம். வியாபாரி என்றால், மேலும் தரமான பொருளை இன்னும் குறைந்த விலைக்கு வாங்கும் வழிகளை தேட வேண்டும். தன் துறையில் மேம்பட நினைப்பவரை தேடி செல்வம் வரும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|