பதிவு செய்த நாள்
09 செப்2015
13:03

சென்னை : தமிழக அரசின் முக்கிய சாதனையாக கருதப்படும், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, சென்னையில் துவங்கியது. முதல்வர் ஜெயலலிதா மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது...
சுமார் 15 நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். தமிழகத்தை அனைத்து துறைகளிலும், இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்றுவதே இந்த அரசின் இலக்கு. பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்து சூழலும் தமிழகத்தில் உள்ளது. உற்பத்தி துறையில் தமிழகம் முதலீடுகளை குவித்து வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சேவைத்துறையில் தமிழகம் தான் சிறந்து விளங்குகிறது.
250 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு
சிறு மற்றும் குறு தொழில்களின் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடம் பெறுகிறது. வாகன உற்பத்தி துறையில் இந்தியாவின் தேசிய மையமாக தமிழகம் திகழ்கிறது. 2014ம் ஆண்டு புதிய தொழில் கொள்கைளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி 250 அமெரிக்க பில்லியன் டாலர் அளவிற்கு தற்போது முதலீடு வந்துள்ளது.
மின் மிகை மாநிலமாக தமிழகம்
2012ம் ஆண்டு மின் கொள்ளையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி மின் உற்பத்தியில் தமிழகம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. வருங்காலத்தில் மின்மிகை மாநிலமாக தமிழக அரசு திகழும். தற்போது அதற்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
தனி நபர் வருமானம் உயரும்
2023ம் ஆண்டுக்குள் தமிழக மக்களின் தனிநபர் வருமானம், வளர்ந்த நாடுகளில் உள்ள உயர்தர மக்களின் வருமானம் அளவிற்கு உயரும் என்று உறுதியளிக்கிறேன். அசோசெம் வெளியிட்டுள்ள ஆய்வில் தமிழகம் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தென்மாநிலங்களில் முதலீடு செய்தால் சலுகை
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் யமஹா நிறுவனம் தனது உற்பத்தியை விரைவில் துவங்க இருக்கிறது. இங்கு வந்திருக்கும் முதலீட்டாளர்கள் தென்மாநிலங்களில், தொழில் தொடங்க ஏதுவாக முதலீடு செய்தால் அவர்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட பிற சலுகைகளை இந்த அரசு வழங்கும். 30 நாட்களில் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்படும். மேலும் தமிழகத்தில் முதலீடு செய்யப்படும் தொழில்கள் லாபகரமாக செயல்படும் என்று உறுதியளிக்கிறேன்.
ஒரு லட்சம் கோடி திரட்ட இலக்கு
தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி முதலீடு திரட்ட இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இப்போது அதையும் தாண்டி முதலீடுகள் குவிந்துள்ளன. தமிழக அரசின் திட்டங்கள் நிறைவேற மத்திய அமைச்சர்கள் உதவ வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|