பதிவு செய்த நாள்
26 பிப்2016
04:43

புதுடில்லி : சென்ற ஜனவரியைத் தொடர்ந்து, நடப்பு பிப்ரவரியிலும், இந்திய நிறுவனங்களின் வணிகம் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த, ‘எம்.என்.ஐ., பிசினஸ் சென்டிமென்ட்’ என்ற ஆய்வு நிறுவனம், உலக நாடுகளின் வணிக நிலவரம் குறித்து, மாதந்தோறும் ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இந்திய வணிக சூழல் குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பிலிப் அக்லவ், வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு பிப்ரவரியில், மும்பை பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்களின், வணிக நிலவரத்தை குறிக்கும், ஐ.பி.எஸ்.ஐ., குறியீடு, 63.5 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, ஜனவரியில், 61.8 ஆக இருந்தது. இந்த உயர்விற்கு, தயாரிப்பு துறை நிறுவனங்கள், முக்கிய காரணமாக உள்ளன. இந்நிறுவனங்களுக்கு, ‘ஆர்டர்’ குவிந்து, உற்பத்தி அதிகரித்துள்ளது. அதேசமயம், உள்நாட்டில் பொருட்களுக்கான தேவையும் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, பல நிறுவனங்கள் கூடுதலாக, ஆட்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, வேலைவாய்ப்பு சூழல் ஏற்ற, இறக்கமின்றி, ஒரே நிலையாக இருந்தது. தற்போது, வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக, 2014, செப்டம்பரில் கண்ட உச்சத்திற்கு பின், சரிந்து வந்த இந்திய வணிக துறையின் வளர்ச்சி, தற்போது எழுச்சி கண்டு வரும் அறிகுறி தோன்றியுள்ளது. தொழில் துறையின் அனைத்து பிரிவிலும், குறிப்பாக, புதிய ஆர்டர்கள், உற்பத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் வளர்ச்சி நன்கு உள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு; அதனால், விலைவாசி குறைந்துள்ளது ஆகியவை, வளர்ச்சிக்கு துணை புரிந்து உள்ளன. அதேசமயம், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, இந்திய நிறுவனங்களுக்கு பாதகமாக அமைந்து உள்ளது. ரூபாய் மதிப்பின் சரிவால், சாதகமான சூழலை, நிறுவனங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|