பதிவு செய்த நாள்
10 மார்2016
07:37

மும்பை : சர்வதேச மருந்து நிறுவனங்கள், அவற்றின் விலை உயர்ந்த மருந்துகளை இந்தியாவில் விற்பதற்காக கொடுத்து வரும் நெருக்கடிக்கு, இந்திய அரசு அடிபணிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம், கல்லீரல் மற்றும் சிறுநீரக புற்றுநோய் சிகிச்சைக்கு, ‘சோராபெரிப்’ என்ற மூல மருந்தை தயாரித்து, அதை, ‘நெக்சவேர்’ என்ற பிராண்டு பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதை வசதிபடைத்த நோயாளிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஏனெனில், ஒரு மாத சிகிச்சைக்கான, 120 மாத்திரைகளின் விலை, 2.80 லட்சம் ரூபாய். அதனால், இந்தியாவைச் சேர்ந்த நாட்கோ நிறுவனம், ‘நெக்சவேர்’ மூல மருந்து தயாரிக்கும் உரிமைக்கு, ‘ராயல்டி’ தருவதாக, பேயரிடம் கூறியது.
அதை, பேயர் ஏற்க மறுத்ததால், நாட்கோ, காப்புரிமை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் முறையிட்டது. ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்து கள் கிடைக்க, இந்திய காப்புரிமை சட்ட திருத்தம் வகை செய்கிறது. அதன் அடிப்படையில், நாட்கோவுக்கு, ‘கட்டாய உரிமம்’ என்ற பிரிவின் கீழ், மூல மருந்து தயாரிக்க, காப்புரிமை கட்டுப்பாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, நாட்கோ, ‘நெக்சவேர்’ மூல மருந்தில் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை, பேயர் விற்ற விலையில், பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக, அதாவது,8,880 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியது.
இதுபோல, மேலும் பல நிறுவனங்கள், குறைந்த விலையில், மூல மருந்துகளை தயாரிக்கத் துவங்கினால், விலை உயர்ந்த, தங்கள் மருந்துகளை இந்தியாவில் விற்க முடியாதே என, அமெரிக்க, ஐரோப்பிய மருந்து நிறுவனங்கள் அஞ்சுகின்றன. அதனால் அவை, ‘கட்டாய உரிமங்களை மருந்து நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது’ என, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கின. இதையடுத்து, ‘இந்தியா, உள்நாட்டு மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக காப்புரிமை சட்டங்களை இயற்றியுள்ளது’ என, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் கூட்டமைப்பு, குற்றம் சாட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு, இந்தியாவின் நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளது. இதனிடையே, கடந்த மாதம், அமெரிக்க – இந்திய வர்த்தக குழு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கள் கூட்டமைப்பிடம் அறிக்கை ஒன்றை அளித்தது.அதில், ‘உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் குறைந்த விலையில் மருந்துகளை விற்பதற்கு உதவும், காப்புரிமை சார்ந்த கட்டாய உரிமங்களை இந்தியா வழங்காது’ என, மத்திய அரசு, தனிப்பட்ட முறையில், உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு, வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், மத்திய அரசு அவ்வாறு கூறியிருந்தால், அது, உள்நாட்டில், உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை தடுத்து விடும் என, மருந்து துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதன் முதலாகஇந்தியாவில், முதன் முதலாக, 2012, மார்ச் 9ம் தேதி, அன்னிய நிறுவனம் ஒன்றின் மூல மருந்தை தயாரிப்பதற்கான ‘கட்டாய உரிமம்’ உள்நாட்டைச் சேர்ந்த, நாட்கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|