பதிவு செய்த நாள்
14 மார்2016
01:08

ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு, வெளிநாட்டு சுற்றுலா பயண செலவு மேலும் அதிகரிக்க செய்வதை, சரியான முறையில் திட்டமிடுவதன் மூலம் தவிர்க்கலாம்...கோடை விடுமுறை சில மாதங்களில் துவங்க உள்ள நிலையில், சுற்றுலா ஏற்பாடுகளை திட்டமிடுவதில் பலரும் ஈடுபடத் துவங்கியிருக்கலாம். இப்போது உள்ளூரில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு பயணமாவது போலவே, வெளிநாடுகளுக்கு சென்று விடுமுறையை கழிப்பதும் பிரபலமாக இருக்கிறது. மத்திய தர மக்களும் கூட, வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை விரும்பி மேற்கொண்டு வருகின்றனர்.பொதுவாக விடுமுறைக்கான சுற்றுலா பயணத்தை திட்டமிடும் போது பருவநிலை, பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல், தங்குமிடம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது வழக்கம். இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது அந்த அளவுக்கு பயண செலவையும் அதிகமாக்கலாம்.
ரூபாயின் மதிப்பு :இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமெரிக்க டாலருக்கு எதிராக, 3.1 சதவீதம் சரிந்துள்ளது. ஐரோப்பிய நாணயமான யூரோவுக்கு எதிராக, 6.6 சதவீதம் சரிந்துஉள்ளது. சிங்கப்பூர் டாலருக்கு எதிராக, 4.7 சதவீதம் மற்றும் மலேஷிய நாணயத்திற்கு (ரிங்கிட்) எதிராக, 6.5 சதவீதம் சரிந்து உள்ளது. இங்கிலாந்தின் பவுண்ட், ரஷ்யாவின் ரூபிள் மற்றும் தென்னாப்ரிக்காவின் ரேண்டிற்கு எதிராகவும் சரிந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறையும் போது வெளிநாட்டு கல்விக்கான செலவு அதிகரிக்கும் என்று கூறப்படுவதுண்டு; சுற்றுலா பயணத்திற்கும் இது பொருந்தும். அமெரிக்க டாலர் மற்றும் யூரோ ஆகிய முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்து இருப்பது நிச்சயம் சுற்றுலா பட்ஜெட்டை பதம் பார்க்கலாம்.
முன்கூட்டியே திட்டமிடல் :ஆனால், இதற்காக சுற்றுலாவை தள்ளிப்போட வேண்டாம். சரியான முறையில் திட்டமிட்டால் அதிகரிக்கும் செலவை சமாளிக்கலாம் என்கின்றனர், பயண ஏற்பாட்டு வல்லுனர்கள்.வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை, ஒரு சிலர் சில மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டிருக்கலாம். இவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், பெரும்பாலான பயண ஏற்பாட்டாளர்கள், பதிவு செய்யப்பட்ட கட்டணத்தை உயர்த்துவதில்லை. எனவே இவர்களின் பயண கட்டணம், தங்குமிடத்திற்கான கட்டணம் போன்றவை மாறாது. ஆனால், வெளிநாடுகளில் சுற்றிப்பார்க்க மற்றும் இதர செலவுகள் ஓரளவு அதிகமாகலாம். இதுவரை திட்டமிடாமல் இருப்பவராக இருந்தால், இப்போது அதற்கு தயாராகிவிடுவது நல்லது. வெளிநாட்டு சுற்றுலாவை, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன், பதிவை திட்டமிடுவது நல்லது என்கின்றனர், பயண ஏற்பாட்டாளர்கள்.
இதன் மூலம் ரூபாயின் மதிப்பு மேலும் சரியும் நிலை ஏற்பட்டால், உண்டாகும் விலை ஏற்றத்தை தவிர்க்கலாம் என்பதோடு விசா போன்ற நடைமுறைகளை கவனிப்பதும் எளிதாக இருக்கும். முன்கூட்டியே பதிவு செய்யும் போது தள்ளுபடி சலுகைகளும் இருக்கும். அதே போல வெளிநாட்டு நாணய மதிப்பில் கணக்கிடும் பயண ஏற்பாட்டாளரை தவிர்த்து, இந்திய ரூபாயில் கணக்கிடும் பயண ஏற்பாட்டு நிறுவனத்தை நாடுவதும் சரியாக இருக்கும். மேலும் நட்சத்திர ஓட்டல் போன்றவற்றை தவிர்த்து, சற்று விலை குறைந்த தங்கும் இடங்களை நாடலாம்.ஐரோப்பிய நாடுகளில் பொது போக்குவரத்து சிறப்பாக இருப்பதால், உள்ளூரில் சுற்றிப்பார்க்க பொது போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆசிய நாடுகள் :அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பு குறையாமல் இருக்கும் நாணயங்களை கொண்ட நாடுகளை தேர்வு செய்வதன் மூலம், செலவை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.டாலர் அல்லாத நாடுகளான துபாய், பாலி, புக்கட் ஆகிய நகரங்களும் பிரபலமாக இருக்கின்றன. நாணய பரிவர்த்தனை விகிதம் பெருமளவில் பாதிக்காத நாடுகளை தேர்வு செய்யலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|