பதிவு செய்த நாள்
01 ஏப்2016
07:42

லண்டன் : ‘‘நலிவுற்ற டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்,’’ என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். டாடா ஸ்டீல் நிறுவனம், 2007ல், பிரிட்டனில் உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த கோரஸ் நிறுவனத்தை, 810 கோடி டாலருக்கு கையகப்படுத்தியது. இதன் மூலம், டாடா ஸ்டீல், ஐரோப்பிய உருக்கு உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும், உலகளவில் ஐந்தாவது இடத்தையும் பிடித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. இதை தொடர்ந்து, 2008ல் துவங்கிய சர்வதேச பொருளாதார மந்த நிலை, உருக்கு தேவை குறைந்தது, சீனாவின் மலிவு விலை உருக்கு இறக்குமதி போன்றவற்றால், டாடா ஸ்டீல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பிரிட்டன் தொழிற்பிரிவுகளை விற்க மேற்கொண்ட முயற்சியும் பலன் அளிக்கவில்லை. சீன ஆதரவாளரான, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும், சீனாவின் மலிவு விலை உருக்கு இறக்குமதியை கட்டுப்படுத்தவில்லை. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் குழு, பிரிட்டன் தொழிற்பிரிவுகளை மூட முடிவு செய்தது. இதனால், 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ‘ஈஸ்டர்’ விடுமுறையை கழிக்க, ஸ்பெயின் சென்ற டேவிட் கேமரூன், அவசர அவசரமாக லண்டன் திரும்பி, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: டாடா ஸ்டீல் நிறுவனத்தை, தற்காலிகமாக அரசே ஏற்று நடத்துவது அல்லது தேசியமயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அது நிரந்தர தீர்வாக இருக்காது. அந்நிறுவனத்தை விற்கவும், தொழிலாளர் நலனை காக்கவும், உருக்கு துறை சந்திக்க உள்ள பாதிப்பை தடுக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|