பதிவு செய்த நாள்
01 ஏப்2016
07:43

புதுடில்லி : வலைதள சந்தை நிறுவனங்களில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், இத்துறையில், அன்னிய நிறுவனங்கள் ஆர்வமுடன் களமிறங்கும் என, தெரிகிறது.
இதனால், நாட்டின் முக்கிய நகரங்களில் அலுவலகங்கள், கிடங்குகளுக்கு தேவை அதிகரிக்கும்; ரியல் எஸ்டேட் துறை சுறுசுறுப்பு அடையும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், ‘இ – காமர்ஸ்’ எனப்படும் மின்னணு வர்த்தகம், மிகச்சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், வலைதள சந்தை நிறுவனங்களில், 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள, சில தினங்களுக்கு முன், மத்திய அரசு அனுமதி அளித்தது. இத்தகைய வலைதள சந்தை நிறுவனங்கள், விற்பனையாளர் – நுகர்வோர் இடையே பாலமாக செயல்படும். அவை, விற்பனையாளர்களின் பொருட்களை பாதுகாப்பாக வைக்க, கிடங்கு வசதிகளை வழங்கும்.மேலும், பொருட்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கான, சரக்கு போக்குவரத்து, விற்பனை உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளும். இச்சேவைகளுக்காக, விற்பனையாளர்களிடம் இருந்து, குறிப்பிட்ட தொகையை, வலைதள சந்தை நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளும்.‘‘இத்தகைய பணிகளுக்காக, வலைதள சந்தையில் களமிறங்கும் புதிய நிறுவனங்கள், அலுவலகங்கள், கிடங்குகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் நிலை உருவாகும்,’’ என, ஜே.எல்.எல்., இந்தியா நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விவரம்: சர்வதேச, ‘இ – காமர்ஸ்’ துறையில் உள்ள, அமேசான், இ – பே போன்ற நிறுவனங்கள், ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இருந்த போதிலும், தற்போது, வலைதள சந்தை நிறுவனங்களில், 100 சதவீதம் அன்னியர்கள் முதலீடு செய்யலாம் என்பதால், மேலும் பல அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் களமிறங்கும்.இத்துடன், ஏற்கனவே உள்ள, ‘பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ போன்ற வலைதள சந்தை நிறுவனங்களும், போட்டி அதிகரிப்பால், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இது, இந்திய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில், அலுவலகங்களுக்கான தேவை அதிகரிக்கும். கிடங்குகளை பொறுத்தவரை, நகரங்கள், புறநகரங்கள், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், தேவை அதிகம் இருக்கும். நுகர்வோரிடம் விரைவாக பொருட்களை சேர்க்க, ஆங்காங்கு கிடங்குகள் இருப்பது அவசியம். இந்திய ரியல் எஸ்டேட் துறை, கடந்த 2 – 3 ஆண்டுகளாக, மந்த நிலையில் உள்ளது. குறிப்பாக, வீட்டுவசதி துறை சுணக்கம் கண்டுள்ளது. இந்நிலையில், ‘இ – காமர்ஸ்’ நிறுவனங்களால், ரியல் எஸ்டேட் துறை, மந்த நிலையில் இருந்து மீண்டெழும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|