பதிவு செய்த நாள்
11 ஏப்2016
01:17

புதுடில்லி : ‘மத்திய அரசின் மின்னணு கொள்கை தெளிவில்லாமல் உள்ளதால், வலைதளத்தில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் சலுகைகள் தொடரும்’ என, இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரீசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வலைதளத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை குறைவாக உள்ளதால், கடைகளில் அப்பொருட்களை விற்பனை செய்வோர் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, புதிய மின்னணு கொள்கையை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, வலைதளங்களில் சந்தையை அமைக்கும் நிறுவனங்களில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வலைதள சந்தை நிறுவனங்கள், பொருட்களை விற்போர் மற்றும் வாங்குவோரிடையே பாலமாக மட்டுமே செயல்பட முடியும்.
நேரடியாக பொருட்களை வாங்கி, இருப்பு வைத்து விற்பனை செய்ய அனுமதியில்லை என, அரசின் விதிமுறை தெரிவிக்கிறது. அதனால், பொருட்களின் விலையை, வலைதள சந்தை நிறுவனங்கள் நிர்ணயிக்க முடியாது. இதன் காரணமாக, தள்ளுபடி சலுகைகள் வழங்கி, விலை குறைவாக பொருட்களை விற்பனை செய்வது கட்டுக்குள் வரும் என, தெரிவிக்கப்பட்டது. ஒரு நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை, 25 சதவீதத்தை தாண்டக் கூடாது எனவும், வலைதள சந்தை நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது, ‘கிளவுட்டெய்ல் இந்தியா, டபிள்யு எஸ் ரீடெய்ல் சர்வீசஸ்’ போன்ற கூட்டு நிறுவனங்களின் பொருட்களை, பெரும்பான்மையாக விற்பனை செய்து வரும், அமேசான் செல்லர் சர்வீசஸ், பிளிப்கார்ட் இந்தியா போன்ற வலைதள சந்தை நிறுவனங்களை பாதிக்கும். அதனால், இந்நிறுவனங்கள், இனி, ‘ஒரு பொருள்; பல வணிகர்கள்’ என்ற திட்டத்தை பின்பற்றி, பொருட்களை விற்பனை செய்யும். இதன் மூலம், அரசின் விதிமுறையை மீறாமல் அதேசமயம், பொருட்களின் விலை மீதான கட்டுப்பாட்டை, அந்நிறுவனங்கள் தங்கள் கைக்கு கொண்டு வந்து விடும். அதன் மூலம், வலைதள சந்தை நிறுவனங்கள், வழக்கம் போல் சலுகைகளை வழங்கும்.
இது, கடை மற்றும் வலைதள பொருட்களின் விலையில் உள்ள வித்தியாசத்தை குறைக்கும் அரசின் முயற்சிக்கு பின்னடைவாக இருக்கும். ‘மின்னணு கொள்கையில் காணப்படும் இதுபோன்ற சில சிக்கல்களுக்கு தீர்வு கண்டால் மட்டுமே, நுகர்வோர் மற்றும் சில்லரை வியாபாரிகளின் நலனை காக்க வேண்டும் என்ற, மத்திய அரசின் நோக்கம் முழுமையாக நிறைவேறும்’ என, இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரீசர்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|