பதிவு செய்த நாள்
28 ஏப்2016
00:02

மும்பை : ‘சர்வதேச மருந்து துறையின் வருவாய், அடுத்த, 12 – 18 மாதங்களில், ஆண்டுக்கு, 3 – 4 சதவீதம் வளர்ச்சி காணும்’ என, பன்னாட்டு தர நிர்ணய நிறுவனமான, மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: உலக மருந்து துறையின் வளர்ச்சி, வரும் ஆண்டுகளில் சீராக இருக்கும். புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கான மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வால், அந்நாட்டுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் காப்புரிமை காலாவதியாக உள்ள மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி மிதமாக இருக்கும்.
அமெரிக்கா, ‘பிராண்டட்’ மருந்துகளின் மிகப் பெரிய சந்தையாக திகழ்கிறது. அதனால், இவ்வகை மருந்துகளின் விலை உயர்வு, தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மருந்துகளின் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், அதற்கான சட்டங்கள் இல்லாததால், அமெரிக்காவில் மருந்துகளின் விலை, அடியோடு குறையும் என, எதிர்பார்க்க முடியாது. சுவாச பிரச்னை, நீரிழிவு உள்ளிட்ட சில நோய்களுக்கான மருந்துகள் தவிர்த்து, பெரும்பாலான மருந்துகள் விலை உயரும். பிராண்டட் மருந்துகளுக்கு போட்டியாக, அவற்றை போன்றே, சட்டப்படி உரிமம் பெற்று தயாரிக்கப்படும், ‘பயோசிமிலர்’ மருந்துகள் உருவெடுத்து வருகின்றன. ஆனால், அவ்வகை மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய், குறைவாகவே உள்ளது.
சர்வதேச அளவில், பெரிய மருந்து நிறுவனங்கள், சிறிய மருந்து நிறுவனங்களை கையகப்படுத்துவது தொடரும். பல நிறுவனங்கள், புதிய மருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளன. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச மருந்து துறையின் வருவாய், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், ஆண்டுக்கு, அதிகபட்சமாக, 4 சதவீதம் வளர்ச்சி காணும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வட அமெரிக்கா கடந்த, 2014 நிலவரப்படி, சர்வதேச மருந்து நிறுவனங்களின் வருவாய், 1.05 லட்சம் கோடி டாலராக உள்ளது. இதில், வட அமெரிக்காவின் பங்கு, 44 சதவீதமாக உள்ளது. வரும், 2020ல், உலகளவில், மருந்துகளுக்காக, 1.41 லட்சம் கோடி டாலர் செலவழிக்கப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|