பதிவு செய்த நாள்
17 மே2016
07:43

மும்பை : பங்குச்சந்தை விதிமீறல் தொடர்பாக, நிறுவனர்களின் சொத்துகளை முடக்க, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’ திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, வாரியத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பங்குச்சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள், காலாண்டு முடிவுகளை, செபிக்கு தெரிவிக்க வேண்டும். அதுபோல, முழு நிதியாண்டு அறிக்கையும், குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும், செயலரை நியமிக்க வேண்டும். இது போன்ற விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு, செபி, அபராதம் விதிக்கிறது. அது, சில ஆயிரங்களில் இருந்து, சில லட்சங்கள் என்ற அளவில் உள்ளது. பல நிறுவனங்கள், இந்த தொகையைக் கூட செலுத்தாமல் உள்ளன. அதனால், அபராதத் தொகையை உயர்த்தவும், விதிமுறைகளை மேலும் கடுமையாக்கவும், செபி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தொடர்ந்து, இரு காலாண்டுகளாக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு, அபராதம் குறித்து ‘நோட்டீஸ்’ அனுப்பப்படும். அதன் பிறகும் அறிக்கை தாக்கல் செய்யாமல், அபராதம் செலுத்தாமல் உள்ள நிறுவனங்களின் இயக்குனர்கள் அல்லது நிறுவனர்களின் வங்கி கணக்கு, சொத்துகள் ஆகியவை முடக்கப்படும். விதிமீறல்களுக்கு தக்கபடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய விதிமுறைகள் குறித்து, செபி விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, மார்ச் மாத நிலவரப்படி, 2,498 நிறுவனங்கள், பங்குச் சந்தை விதிமுறைகளை மீறியுள்ளன. அவற்றின் மீது, செபி நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|