பதிவு செய்த நாள்
17 மே2016
07:45

புதுடில்லி : ‘இந்தியாவில், 50 கோடி டாலராக உள்ள, ‘ஆர்கானிக்’ உணவு பொருட்கள் சந்தை, வரும், 2020ல், 136 கோடி டாலர் மதிப்புமிக்கதாக வளர்ச்சி காணும்’ என, ‘அசோசெம்’ அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்தாமல், இயற்கை உரங்கள் மூலம் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் முறைக்கு, ‘ஆர்கானிக்’ விவசாயம் என்று பெயர். இவ்வகை, இயற்கை விவசாயத்தில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானவை. அதே சமயம், இயற்கை விவசாயத்தில், உற்பத்தி குறைவாக உள்ளதால், இவ்வகை வேளாண் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. இருந்தபோதிலும், ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கு, இந்தியா உட்பட, உலக நாடுகளில் மவுசு பெருகி வருகிறது. உலகளவில், 82 நாடுகளில், இயற்கை விவசாய ஒழுங்குமுறை சட்டங்கள் உள்ளன.
இந்தியாவில், 100 சதவீதம் இயற்கை விவசாயம் நடைபெறும் முதல் மாநிலம் என்ற சிறப்பை, சிக்கிம் பெற்றுள்ளது. மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, மிசோரம், கேரளா உள்ளிட்ட, 13 மாநிலங்கள், முழுமையான இயற்கை விவசாயம் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகின்றன. கடந்த, 2014, மார்ச் நிலவரப்படி, இயற்கை விவசாய நிலப் பரப்பு, 47.20 லட்சம் ஹெக்டேர் ஆக உள்ளது. இதில், 6.5 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த, 2014ல், இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்களின் மதிப்பு, 36 கோடி டாலராக இருந்தது. இது, தற்போது, 50 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அடுத்த, நான்கு ஆண்டுகளில், இச்சந்தை, 136 கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை உணவுப் பொருட்கள் உற்பத்தியில், பருப்பு வகைகள் முதலிடத்திலும், அடுத்து, நெல் உள்ளிட்ட உணவு தானியங்களும் உள்ளன. பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவே, இயற்கை விவசாயம் வளர்ச்சி கண்டு வருகிறது. செயற்கை ரசாயனங்களால் பாழ்பட்ட விளைநிலத்தை, இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாற்ற, மூன்று ஆண்டுகள் ஆகும். அதனால் ஏற்படும் இழப்பை கருதி, பலர், இயற்கை விவசாயத்திற்கு மாற தயங்குகின்றனர். அந்த இழப்பை ஈடு செய்ய, மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். அவை அளிக்கும் ஊக்கத்தை பொறுத்தே, வளமான வர்த்தக வாய்ப்பு கொண்ட, இயற்கை விவசாயம் விரைந்து வளர்ச்சி காணும் என, அசோசெம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, மூன்று ஆண்டுகளில், 412 கோடி ரூபாய் திட்டச் செலவில், 5 லட்சம் ஏக்கர் பரப்பை, இயற்கை விளை நிலமாக மாற்ற, இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|