பதிவு செய்த நாள்
26 மே2016
00:28

புதுடில்லி : இந்தியாவில் இருந்து, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்படி, ‘மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் போது, அவற்றில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு குறித்த அறிக்கையை, இந்திய நிறுவனங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும்’ என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடைமுறை, இம்மாதம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ‘ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஏற்றுமதி செய்யும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுடன், அவற்றில் காணப்படும், பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு குறித்த ஆய்வறிக்கையை அனுப்ப வேண்டும்’ என, இந்திய நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையை, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான – அபிடா, அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது. உலகில், வேளாண் பொருட்கள் உற்பத்தியில், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவை, அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை விவசாயத்தில் விளையும் வேளாண் பொருட்களில், பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்ட நச்சுப் பொருட்களின் அளவை, ‘கோடக்ஸ் அலிமென்டரியஸ் ஆணையம்’ என்ற சர்வதேச அமைப்பு நிர்ணயம் செய்துள்ளது.
உலக நாடுகள், இந்த அளவீட்டிற்கான சான்றிதழுடன், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. இந்நிலையில், ‘இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி, பூச்சிக் கொல்லி மருந்து கலந்துள்ளது’ என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதையடுத்து, ‘மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, இந்தியாவில் இருந்து, பூச்சிக் கொல்லி மருந்து குறித்த ஆய்வறிக்கையுடன் வந்தால் மட்டுமே, மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஏற்றுமதிகடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்தியா, 2.62 லட்சம் டன் காய்கறிகள், 48,591 டன் பழ வகைகள் ஆகியவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|