பதிவு செய்த நாள்
30 மே2016
07:53

பேமென்ட் வங்கிகள் துவக்குவதற்கான அனுமதி பெற்ற நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் இந்த முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளன. இதற்கான காரணங்கள் என்ன?
பேமென்ட் வங்கிகள் புதிய வகை வங்கியாக இருப்பதோடு இந்திய வங்கித்துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வகை வங்கிகளை துவக்க அனுமதி பெற்ற 11 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் இந்த முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் நிறுவனம், பேமென்ட் வங்கி திட்டத்தில் இருந்து பின்வாங்கியது. அண்மையில் திலிப் சங்கி இந்த முடிவை அறிவித்தார். அதன் பிறகு டெக் மஹிந்திரா நிறுவனமும் பேமென்ட் வங்கி துவக்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
புதிய கருத்தாக்கம்பேமென்ட் வங்கிக்கான கருத்தாக்கம் 2014ல் ரிசர்வ் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதற்கான கொள்கை அளவிலான அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக விண்ணப்பித்த 41 நிறுவனங்களில் 11 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. செயல்பாட்டை துவக்க இவற்றுக்கு 18 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.அனுமதி பெற்ற இந்திய தபால் துறை உள்ளிட்டவை புதிய வங்கியை துவக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், மூன்று நிறுவனங்கள் இந்த முடிவை கைவிட்டுள்ளன. வர்த்தக செயல்பாடுகளுக்கான அதிக வாய்ப்புகள் இல்லாதது, லாப விகிதம் தொடர்பான கவலை மற்றும் அதிகரிக்கும் போட்டி ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.
பேமென்ட் வங்கிகள், வழக்கமான வங்கிகளை விட கட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடுகளை கொண்டவை. அவை பிரதானமாக பணம் அனுப்புதல் மற்றும் பணம் செலுத்துதல் சேவையை மொபைல் மூலம் வழங்கும். சேமிப்பு கணக்குகளை துவக்கலாம் என்றாலும், கடன் வழங்க அவற்றுக்கு அனுமதி இல்லை. ஒரு லட்சம் ரூபாய் வரை டிபாசிட் பெறலாம்.
தொழில்நுட்ப மாற்றம்அனைவருக்கும் வங்கி சேவை எனும் இலக்கை நிறைவேற்றும் நோக்கத்தில் இந்த வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில், இன்னமும் வங்கிச்சேவை பெறாதவர்களை இவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இவை மொபைல் போன் சார்ந்து செயல்பட உள்ளன. இந்த வகை வங்கிகள் லாபமீட்ட குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மேலும், லாபமீட்ட, இவை கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. பணம் செலுத்துதல் மற்றும் பண பரிவர்த்தனை போன்றவையே இவற்றின் பிரதான செயல்பாடாக இருக்கும் என்பதால் இவற்றின் மூலமான கட்டணமே முக்கிய வருவாயாக இருக்கும்.
வழக்கமான வங்கிகள் போல வட்டி வருவாய் இருக்காது. அதே நேரத்தில் இந்த வங்கிகள் டிபாசிட்டாக திரட்டும் தொகையில் பெரும் பகுதியை அரசு பத்திரங்களில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதும் லாப விகிதத்தை பாதிக்கும். மேலும், இந்த வங்கிகளுக்கான அனுமதி வழங்கப்பட்ட பிறகு கடந்த பத்து மாதங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை துறையில் பெரும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பண பரிவர்த்தனை வசதி எளிதாகி இருப்பதோடு, தேசிய பேமென்ட் கார்ப்பரேஷனின் ஒருங்கிணைந்த பேமென்ட் முறை டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கி இருக்கிறது.
எதிர்காலம் என்ன?இந்த சேவையை பேமென்ட் வங்கியை வேறுபடுத்தும் முக்கிய அம்சமாக இருந்ததால் தற்போதைய நடவடிக்கைகள் இந்த ஈர்ப்பை வெகுவாக குறைத்து உள்ளது. எனினும், சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வங்கிகள் மாற்றத்தை ஏற்படுத்த வல்லவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. தொலைதொடர்பு துறை நிறுவனங்களுக்கு இவை மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது எஞ்சியுள்ள நிறுவனங்களில் மூன்று தொலைதொடர்பு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை பொருத்தவரை பேமென்ட் வங்கி சேவை மூலம் வருவாய் ஈட்டுவதை விட வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், ஈர்க்கவும் இது மிகவும் அவசியம் என்றும் கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|