பதிவு செய்த நாள்
11 ஜூன்2016
07:39

புதுடில்லி : ‘இந்திய நெடுஞ்சாலை துறை, 8,450 கோடி ரூபாய் அளவிற்கு, மறுகடன்களை திரட்டி, இடர்ப்பாடுகளில் இருந்து மீள வாய்ப்புள்ளது’ என, ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:கடந்த சில ஆண்டுகளாக, நெடுஞ்சாலை சார்ந்த திட்டங்களை மேற்கொண்டு வரும் பல நிறுவனங்கள் வருவாய் இழப்பையும், நிதி நெருக்கடியையும் சந்தித்து வருகின்றன. பல திட்டங்களில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத நிலை உள்ளது. நிலம் கையகப்படுத்துவதிலும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
புதிய நடைமுறைஇத்தகைய சாதகமற்ற சூழலிலும், நெடுஞ்சாலை பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், 8,450கோடி ரூபாய் வரை மேலும் கடன் திரட்ட வாய்ப்புள்ளது. இந்த நிதியாதாரத்துடன், இடர்ப்பாடுகளை சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், நெடுஞ்சாலை துறைக்கு புத்துயிரூட்டும். ஏற்கனவே செய்த முதலீடுகள், லாபகரமானவையாக மாறும்.நெடுஞ்சாலை திட்டங்களை பூர்த்தி செய்துள்ள பல நிறுவனங்கள், வட்டி சுமையை குறைக்கும் நோக்கில், மூலதன சந்தையில் நிதி திரட்டவும், வங்கிகளில் மறுகடன் பெறுவதற்கும் முயற்சித்து வருகின்றன. இந்த வகையில் திரட்டப்படும் நிதி, புதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என்பதால், நெடுஞ்சாலை துறை எழுச்சி காண வாய்ப்புஉள்ளது.
நெடுஞ்சாலை திட்டங்களில், மத்திய அரசும், தனியாரும், 40:60 சதவீத அடிப்படையில் முதலீடு மேற்கொள்ளும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பழைய நடைமுறை போலன்றி, தற்போது, நெடுஞ்சாலை பணி துவங்கியதும், மத்திய அரசின், 40 சதவீத முதலீட்டை தவணையில் பெறுவதற்கு, இத்திட்டம் வழி வகுக்கிறது. அடுத்த இரு ஆண்டுகளில், நெடுஞ்சாலை துறையில், 47 சதவீத பணிகளில், இந்த நடைமுறையே பின்பற்றப்படும். இது, ஏற்கனவே நெடுஞ்சாலை பணிகளில் கையை சுட்டுக் கொண்டு, விலகிச் சென்ற பல நிறுவனங்களை, மீண்டும் ஈர்க்க துணை புரிந்து வருகிறது.
அதிகரிக்கும் முதலீடுகள்நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு, 55 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், வட கிழக்கு பிராந்தியத்திற்கு, சிறப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், நெடுஞ்சாலை துறையில் தனியார் முதலீடுகள் அதிகரிக்கும். தற்போது, அதிக கடன் சுமையுடன், 25,500 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கடன்களை மறுசீரமைக்கவோ அல்லது மறுகடன்களை திரட்டவோ நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|