பதிவு செய்த நாள்
07 ஜூலை2016
05:49

மும்பை : இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்குவதற்கு வசதியாக, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான விதிமுறைகள், மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.
வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன. இந்நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வதற்காக, மத்திய அரசு, 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், நிதியம் அமைக்கிறது. மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி, மூலதன ஆதாய வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அத்துடன், தொழிலாளர் நல அதிகாரிகள் ஆய்வில் இருந்து விலக்கு; சுய சான்றுடன் தொழில் நடத்த அனுமதி உட்பட, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு மேலும் தளர்த்தியுள்ளது.
இது குறித்து, மத்திய நிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ‘கன்வர்டபிள் நோட்’ வாயிலாக, முதலீட்டை திரட்டிக் கொள்ளலாம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நிறுவனம், ஒரு முறை மட்டும், 25 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை, கன்வர்டபிள் நோட் மூலம் பெற அனுமதிக்கப்படும்; இது, நிறுவனங்கள் திரட்டும், ‘டிபாசிட்’ பிரிவின் கீழ் வராது என, அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
இதற்காக, நிறுவனங்களின் டிபாசிட் ஏற்பு சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, கன்வர்டபிள் நோட் மூலம் திரட்டப்படும் நிதியை, ஐந்து ஆண்டுகளுக்குள், முதலீட்டாளர்களுக்கு பங்குகளாக மாற்றித் தரவோ அல்லது முதலீட்டை திரும்ப அளிக்கவோ, தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழியில் திரட்டும் முதலீடு பற்றிய விவரத்தை, நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையில் இருந்தும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்களுக்கு, டிபாசிட்டை திரும்ப அளிப்பதற்கென, கையிருப்பு கணக்கை துவக்கி, பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறையில் இருந்தும் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சலுகைகள் அனைத்தும், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீடு தொடர்பான விதிமுறைகளை, இரண்டாவது முறையாக தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரி சலுகைகளுக்கு விண்ணப்பம் கடந்த ஜூன் இறுதிவரை, வரிச் சலுகைகளுக்காக, 571 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில், 106 நிறுவனங்களின் கோரிக்கைகள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளன. அவற்றில், பெரும்பான்மையான நிறுவனங்கள், கடந்த ஏப்ரலுக்கு முன் பதிவு செய்யப்பட்டவை என்பதால், அவற்றுக்கு வரிச் சலுகை தவிர்த்து, இதர சலுகைகள் கிடைக்கும். வரிச் சலுகைகளுக்கு, 12 நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|