பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
23:26

புதுடில்லி : ‘மத்திய பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டையும் இணைக்க வேண்டும்’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 92 ஆண்டுகளாக, பார்லிமென்டில், ரயில்வே பட்ஜெட் தனியே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘மத்திய பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை இணைக்கலாம்’ என, ‘நிடி ஆயோக்’ உறுப்பினர் பிபேக் டெப்ராய், யோசனை தெரிவித்திருந்தார். அதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு, ரயில்வே அமைச்சகத்திற்கு, பிரதமர் அலுவலகம் கடிதம் எழுதியிருந்தது. இதற்கு, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஒப்புதல் தெரிவித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து, இரு பட்ஜெட்டுகளையும் இணைப்பது குறித்து, மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என, தெரிகிறது. இந்திய ரயில்வே, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பயணிகள் பிரிவில் மட்டும், 34 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது. இத்துடன், 4.83 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 458 திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ரயில்வே பட்ஜெட், மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டால், ரயில்வேயின் நிதிச் சுமை, நிதியமைச்சகத்திற்கு மாறும். அதற்கேற்ப, ரயில்வே திட்டங்களுக்கான நிதியை, நிதியமைச்சகம் ஒதுக்கும். ‘இந்த நடைமுறை, வரும் 2017 – 18ம் நிதியாண்டில் அமலுக்கு வருமா என்பதை, தற்போது கூற இயலாது’ என, ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|