பதிவு செய்த நாள்
21 ஜூலை2016
07:36

புதுடில்லி : மத்திய அரசின் உத்தரவின் பேரில், சேவைகள் துறை சார்ந்த நிறுவனங்கள், அவற்றின் வர்த்தக செயல்பாடுகள் குறித்த தகவல்களை தொகுக்கும் பணியை, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகமான – என்.எஸ்.எஸ்.ஓ., துவக்கியுள்ளது.
சேவைகள் துறையில், ஐ.டி., – ஐ.டி.இ.எஸ்., தொலைத்தொடர்பு, நிதி, ஓட்டல், போக்குவரத்து, ரியல் எஸ்டேட், வர்த்தக சேவைகள் உட்பட பல பிரிவுகள் அடங்கியுள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை, சேவைகள் துறை வழங்கி வருகிறது. எனினும், இத்துறையின், பொருளாதார நடவடிக்கைகள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள், மிகச் சிறிய அளவிலேயே திரட்டப்படுகின்றன. தற்போது, என்.எஸ்.எஸ்.ஓ., ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் குறித்த புள்ளிவிபரங்களை தயாரிக்கிறது. அவற்றில் ஒன்றாக, சேவைகள் துறை உள்ளது. இது தவிர, சேவை துறை நிறுவனங்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும், அத்துறை சார்ந்த அறிக்கை வெளியிடுகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துல்லியமாக கணிக்க, இத்தகவல்கள் போதுமானவை அல்ல என, மத்திய அரசு கருதுகிறது.எனவே, நாடு தழுவிய அளவில், அமைப்பு சார்ந்த சேவை துறை, நிறுவனங்களின் முழுமையான வர்த்தக விபரங்களை சேகரிக்குமாறு, மத்திய வர்த்தக அமைச்சகம், புள்ளியியல் அமைச்சகத்தை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, என்.எஸ்.எஸ்.ஓ.,வின், 74வது சுற்று, புள்ளி விபர சேகரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் சேவைகள் மற்றும் அதன் உட்பிரிவுகளில் உள்ள நிறுவனங்களின் வர்த்தக செயல்பாடுகள் குறித்த தகவல்களை திரட்டும் பணி, கடந்த, 1ம் தேதி துவங்கியது. இப்பணி, அடுத்த ஆண்டு, ஜூன், 30ம் தேதி வரை நடைபெறும்.
இதையடுத்து, சேவை துறையின் கீழ் உள்ள அனைத்து பிரிவுகளின் முழுமையான வர்த்தக விபரங்கள் வெளியாகும். இதனால், நாட்டின் மொத்த வர்த்தகம், ஏற்றுமதி உள்ளிட்டவை குறித்து, மேலும் தெளிவான, திடமான புள்ளிவிபரங்களை தொகுக்கவும், அவற்றின் அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை துல்லியமாக மதிப்பிடவும் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சேவைகள் துறையில் உள்ள, ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., பிரிவுகளின் வருவாய், 2014 – 15ம் நிதியாண்டில், 14,600 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டில், 11,800 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|