பதிவு செய்த நாள்
05 ஆக2016
00:33

ஐதராபாத் : ‘‘உலகளாவிய பொருளாதார மந்தநிலையால், ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறை சார்ந்த நிறுவனங்களின் வருவாய் குறைய வாய்ப்புள்ளது,’’ என, தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘நாஸ்காம்’ன் தலைவர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்படும் தாக்கம், இந்தியாவில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பாதிக்கிறது.அதுபோல, ஐ.டி.இ.எஸ்., எனப்படும், ஐ.டி., துறை சார்ந்த சேவைகள் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் பாதிப்பிற்கு ஆளாகின்றன.
கொந்தளிப்பான நிலை :இவற்றின் பெரும்பான்மையான வர்த்தகம், ஏற்றுமதியை சார்ந்துள்ளது தான் இதற்கு காரணம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, அதிகளவில் சாப்ட்வேர் சேவைகள் ஏற்றுமதியாகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, பி.பி.ஓ., எனப்படும் பணிகளை பெற்று முடித்து தரும் சேவைகளில், ஏராளமான இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதனால், உலகளவில் ஏற்படும் எத்தகைய சிறிய தாக்கமும், இந்தியாவின் ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகளை பாதிப்பதாக உள்ளது. தற்போது, சர்வதேச பொருளாதாரத்தில் ஒருவகையான கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது.
ஐரோப்பா முழுவதும் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. குறிப்பாக, தெற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்து உள்ளது; சில நாடுகள், வளர்ச்சியில் பின்னடைவை சந்தித்துள்ளன.ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக, பிரிட்டன் முடிவு செய்ததை அடுத்து, அதன் கரன்சியான ஸ்டெர்லிங் பவுண்டு மதிப்பு குறைந்துள்ளது. இதனால், இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வரம்பு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.டி., நிறுவனங்கள், நடைமுறைச் செலவினங்களை குறைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்க விரும்புகின்றன. அதனால், பணிகளில் தானியங்கி நடைமுறையை புகுத்தி வருகின்றன. குறிப்பாக, ஐ.டி., துறையில் ஆட்கள் செய்யும் பல பணிகள், சாப்ட்வேர் உதவியால் குறைக்கப்படுகின்றன.
வேலை வாய்ப்பு :இதன் காரணமாக, ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், பணிக்கு ஆட்களை நியமிப்பதும் மெல்ல குறைந்து வருகிறது. ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறை, 10 ஆயிரம் கோடி டாலர் சந்தையாக உருவெடுத்த போது, 30 லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு வழங்கியது. மீண்டும் இதே மதிப்பில், சந்தை உருவாகும்பட்சத்தில், 15 லட்சம் பேருக்கு தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|