பதிவு செய்த நாள்
08 ஆக2016
07:24

மும்பை : ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வரும் 15ம் தேதி, அதிகாரப்பூர்வமாக தொலைதொடர்பு சேவையில் இறங்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
மொபைல்போன் சேவை வழங்க, நாடு தழுவிய அளவில், 5 லட்சம் செயல்பாட்டு மையங்களை நிறுவவும்; மொபைல்போன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 10 லட்சம் ‘ரீசார்ஜ்’ கடைகளை அமைக்கவும், ‘ஆர்ஜியோ’ என, சுருக்கமாக அழைக்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.
மொபைல்போன் சேவை குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம்: கடந்த, 2015, பிராட்பேண்ட் கமிஷன் அறிக்கைப்படி, மொபைல்போனில் இணைய வசதியை பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா, 155வது இடத்தில் உள்ளது. ஆர்ஜியோவின், தொலைதொடர்பு சேவை அறிமுகமான பின், உலகளவில் மொபைல்போனில், மிக அதிக அளவில் இணைய சேவையை பயன்படுத்தும், முதல் 10 நாடுகளின் பட்டியலில், இந்தியா இடம் பெறும்.
அமெரிக்காவில், மொபைல்போனில் இணைய வசதி பெறும் பகுதி, 75 சதவீதமாக உள்ளது; இது, இந்தியாவில், 15 சதவீதம் என்ற அளவில், மிகக் குறைவாக உள்ளது. இதை, ஆர்ஜியோ தன் சேவை மூலம், 70 சதவீதமாக உயர்த்திக் காட்டும்; இது, அடுத்த ஓராண்டில், 90 சதவீதமாக உயரும். அந்த அளவிற்கு, நாடு முழுவதும் பரவலான தொலைதொடர்பு வசதியை ஆர்ஜியோ வழங்கும். தொலைதொடர்பு சேவையை நிர்வகிக்க, ஆர்ஜியோ, நாட்டின் பல்வேறு நகரங்களில், 1,072 அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன், வாடிக்கையாளர்களுக்கு மொபைல்போன் இணைப்பு சேவை வழங்க, 5 லட்சம் செயல்பாட்டு மையங்களும், 10 லட்சம் ரீசார்ஜ் கடைகளும் திறக்கப்படும். அதுமட்டுமின்றி, டிஜிட்டல் முறையில், ரீசார்ஜ் செய்யும் வசதியும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
ஆர்ஜியோ, தற்போது சோதனை அடிப்படையில் மொபைல்போன் சேவை வழங்கி வருகிறது. இச்சேவையை, ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள், பங்குதாரர்கள், பொதுமக்கள் என, 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, ஒருவர், மாதத்திற்கு, சராசரியாக, 26 ஜி.பி., அளவிற்கு மொபைல்போன் வாயிலாக தகவல்கள், படங்கள் உள்ளிட்டவற்றை பரிமாறிக் கொள்கிறார்; மொபைல்போனில், 355நிமிடங்கள் உரையாடுகிறார் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆர்ஜியோ, நாடு தழுவிய அளவில், வர்த்தக ரீதியிலான மொபைல்போன் சேவையை விரைவில் வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நாட்டின் சுதந்திர தினமான, வரும், 15ம் தேதி, ஆர்ஜியோ மொபைல்போன் சேவையை, அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|