பதிவு செய்த நாள்
21 ஆக2016
06:33

புதுடில்லி:‘இந்தியாவின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறைகளில், வரும், 2022ம் ஆண்டிற்குள், 7.50 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என, கே.பி.எம்.ஜி.,ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் சார்ந்த ஏராளமானதிட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.உதாரணமாக, 2022க்குள், அனைவருக்கும் வீடு, ‘ஸ்மார்ட் சிட்டி, அம்ருத், ஹிரிடே’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.இவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில், ரியல் எஸ்டேட் சட்டம், ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட், ஜி.எஸ்.டி., போன்ற கொள்கை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதனால், வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 6 கோடி வீடுகள் பற்றாக்குறையாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், நகர்ப்புறங்களில் மட்டும், 2 கோடி வீடுகளுக்கு தேவை உள்ளது. வரும், 2022ல், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில், 11 கோடி வீடுகள் தேவைப்படும் என்பதால், நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறைகளில் மட்டும், 7.50 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும். இத்துறையில் இந்தியா, வரும், 2030ல், உலகளவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையின் பங்களிப்பு, 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும். கட்டுமான சந்தையின் மதிப்பு, 1 லட்சம் கோடி டாலராக விரிவடையும். கடந்த, 2015ல், இந்திய நகர்ப்புற மக்கள் தொகை, 42 கோடியாக உள்ளது. இது, 2030ல், 40 சதவீதம் வளர்ச்சி கண்டு, 58 கோடியாக உயரும். இதன்காரணமாக, நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, அலுவலக கட்டடங்கள், வர்த்தக வளாகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு கேந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கான தேவை அதிகரிக்கும்.
நாட்டின் அடிப்படை கட்டமைப்பு துறையில், 6.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 432 சாலை திட்டங்கள், 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.விமான நிலையங்கள் மேம்பாட்டிற்கு, 6,700 கோடி ரூபாயில், 70 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. துறைமுக மேம்பாட்டிற்காக, 55,100 கோடி ரூபாய் செலவில், 75 திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால், இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிறப்பான முதலீட்டு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. கட்டட வடிவமைப்பு, மேம்பாடு, கட்டுமானம், நிதி உள்ளிட்ட பிரிவுகளில், ஏராளமான நிறுவனங்கள் களமிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|