பதிவு செய்த நாள்
23 ஆக2016
04:54

புதுடில்லி : ‘உலகில், தொழில்நுட்பம் சார்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் அதிகமாக உள்ள நாடுகளின் வரிசையில், இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது’ என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வலைதளம் மூலம், புதுமையான தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன.
இந்நிறுவனங்கள் குறித்து, ‘அசோசெம்’ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விபரம்: உலகளவில், அமெரிக்காவில் தான், தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகமுள்ளன. இங்கு, 47 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 10 சதவீதத்திற்கும் குறைவாக, அதாவது, 4,500 நிறுவனங்களுடன், பிரிட்டன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில், 2015 நிலவரப்படி, தொழில்நுட்பம் சார்ந்த, 4,200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
உலகளவில், அதிகளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ள நாடுகளில், அமெரிக்கா, முதலிடத்தில் உள்ளது. இங்கு, தொழில்நுட்பம் மற்றும் அது சாராத துறைகளில், 83 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில், இந்தியாவும், சீனாவும், தலா, 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இடம் பிடித்துள்ளன.
இந்தியாவில், தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 26 சதவீத பங்களிப்புடன், பெங்களூரு நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்து, டில்லி மற்றும் தலைநகர் பிராந்தியம், 23 சதவீதம்; மும்பை, 17 சதவீதம்; ஐதராபாத், 8 சதவீதம் என்ற அளவில் பங்களிப்பை கொண்டுள்ளன.
சென்னை, புனே நகரங்களில், தலா, 6 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளில், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், இந்நிறுவனங்களில் அன்னிய முதலீட்டாளர்களும், நிதி நிறுவனங்களும், ஆர்வமுடன் முதலீடு செய்கின்றன.
தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சீரான வளர்ச்சியை கண்டு வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு, நாடு முழுவதும் பரவ வேண்டும். இதற்கு மத்திய அரசின், ‘ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா’ போன்ற திட்டங்கள் உதவும்.
புதிய உத்திகளுக்கான ஆய்வு மற்றும் சோதனைகளை ஊக்குவிக்க, வரிவிலக்கு சலுகைகள் வழங்க வேண்டும். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை போல், இந்திய கல்லுாரிகளில், சிறிய வியாபாரங்களை உருவாக்குவதற்கான பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் மூலம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையமாக, இந்தியா உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|