பதிவு செய்த நாள்
01 செப்2016
23:33

புதுடில்லி : ‘வாகன துறை தொடர்பான பிரச்னைகளுக்கு, உடனுக்குடன் தீர்வு கண்டு, அத்துறை, தடையில்லா வளர்ச்சி காண்பதற்காக, தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்’ என, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கூட்டமைப்பின், 56வது ஆண்டு பொதுக்கூட்டம், டில்லியில் நடைபெற்றது. அதில், சியாம் தலைவரும், அசோக் லே லாண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான வினோத் தேசரி பேசியதாவது: டில்லியில், சுற்றுச்சூழல் மாசு வழக்கில், 2,000 சி.சி., மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட டீசல் கார்களுக்கு, 2015 டிசம்பரில், சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இந்த தடை உத்தரவு, ‘2,000 சி.சி., இன்ஜின் திறனுள்ள, டீசல் கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள், ஒரு சதவீதம் பசுமை வரி செலுத்த வேண்டும்’ என்ற நிபந்தனையுடன், கடந்த மாதம் தளர்த்தப்பட்டது.
இருந்த போதிலும், இந்த தடையால், கடந்த எட்டு மாதங்களில், வாகன துறைக்கு, 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது போல், பல பிரச்னைகளை வாகன துறை சந்தித்து வருகிறது. இதே நிலை, எதிர்காலத்திலும் தொடரும் என்ற அச்சமும் உள்ளது. வாகன துறையின் வளர்ச்சிக்கு தடையாகவும், அன்னிய நேரடி முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாகவும் உள்ள பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண, இந்திய வாகன துறைக்கு என, தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.
இதுகுறித்து, மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை மனு அளிக்கப்படும். தனி அமைச்சகம், வாகன துறைக்கு தொழில்நுட்பம் சார்ந்த ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை உருவாக்கும். அவற்றை, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றும்பட்சத்தில், பிரச்னைகள் குறையும். வாகன துறை சந்திக்கும் பிரச்னைகளை புரிந்து கொண்டு, உரிய முறையில் அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை, தனி அமைச்சகம் விரைந்து எடுக்கும். இது, வாகன துறையின் தடையற்ற, சீரிய வளர்ச்சிக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
டில்லியில், டீசல் கார்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், மெர்சிடெஸ் பென்ஸ், டொயோட்டா உள்ளிட்ட, பன்னாட்டு நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளன. இந்நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்டு முதலீடு செய்யும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளன. சுற்றுச்சூழல் பிரச்னையை சமாளிக்க, மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், அதன் டீசல் கார்களில், 1,990 சி.சி., திறனுள்ள இன்ஜின்களை பொருத்த முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|