பதிவு செய்த நாள்
12 செப்2016
03:02

புதுடில்லி : ‘இந்திய மின்னணு வணிகத் துறையின் சந்தை மதிப்பு, வரும், 2019–20ம் நிதியாண்டில், 1.90 லட்சம் கோடி ரூபாயாக உயரும்’ என, கோட்டக் ஈக்யுட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: இந்திய மக்கள், வலைதளம் வாயிலாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. அத்துடன், தனிநபர் செலவழிப்பும் நிலையாக உயர்ந்து வருகிறது.இதனால், மின்னணு வணிகத் துறையின் வளர்ச்சி, சிறப்பாக உள்ளது. வரும் ஆண்டுகளில், மேலும் பல நிறுவனங்கள் இத் துறையில் களமிறங்க உள்ளன. அதனால், மின்னணு வணிக சந்தையின் மதிப்பு, 2019 – 20ம் நிதியாண்டில், 1.90 லட்சம் கோடி ரூபாயாக உயரும். இதே காலத்தில், தற்போது, 12 சதவீதமாக உள்ள வலைதளத்தில் பொருட்கள் வாங்குவோரின் பங்கு, 18 சதவீதமாக உயரும்.
வலைதளத்தில் பொருட்களை வாங்க செலவிடுவது, ஆண்டுக்கு, சராசரியாக, 10 – 15 சதவீதம் அதிகரிக்கும். அதிகரித்து வரும் குடும்ப வருவாய், பெருகி வரும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றால், 2017 – 20 வரை, மின்னணு வணிக துறையின், ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம், 45 சதவீதமாக உயரும்.மின்னணு வணிக நிறுவனங்கள், அவற்றின் விற்பனை கொள்கையில், காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை செய்தால் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக, லாப வரம்பு குறைவாக உள்ள மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விற்பனைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சாதனங்கள், போட்டி வலைதளங்களில், வெவ்வேறு விலைகளில் கிடைப்பதால், வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மையை தக்க வைத்துக் கொள்வது கடினமாக உள்ளது. அதனால், புதிய, வித்தியாசமான, தனித்தன்மையுள்ள பொருட்களை சந்தைப்படுத்துவதில், நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். பொருட்களை விரைந்து, ‘டெலிவரி’ செய்தல், விற்பனை செய்து பணம் பெற்றுக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற முடியும்.
மின்னணு வணிகத்தில், நீண்ட காலமாக வலைதளத்தில் பொருட்களை வாங்கி வருவோரையும், உயர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை விரும்புவோரையும் கவர, நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், புதிதாக வலைதளத்தில் பொருட்கள் வாங்குவோர் அதிகம் இருப்பர். அவர்களின் நம்பிக்கையை பெற, சிறிது காலமாகும்.
இந்தியர்கள், 2025ல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, ஆரோக்கிய பராமரிப்பு போன்ற அத்தியாவசியமான அல்லது ஓரளவு அவசியமான துறைகளுக்கு அதிகமாகவும்; ஆடைகள், வீட்டு வசதி பொருட்கள், தனிநபர் சாதனங்கள் ஆகியவற்றுக்கு குறைவாகவும் செலவிடுவர் என, கணிக்கப்பட்டுள்ளது. அதனால், அப்போது, வலைதளம் வாயிலான சில்லரை விற்பனையும், அவற்றுக்காக மக்கள் செலவிடுவதும் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|