பதிவு செய்த நாள்
12 செப்2016
15:03

சேலம்:வரிசை கட்டும் பண்டிகைகள் காரணமாக, நெய், வெண்ணெய் விலை, கிலோவுக்கு, 25 ரூபாய் உயர்ந்து உள்ளது. வடமாநில வியாபாரிகள், 1,000 கோடி ரூபாய்க்கு நெய், வெண்ணெய்க்கு ஆர்டர் கொடுத்துள்ளது, தனியார் பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, காங்கேயம் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகிய இடங்களில், வெண்ணெய், நெய் உற்பத்தி அதிகளவில் நடந்த போதும், தமிழகத்தின் தேவையை, வட மாநிலங்களே அதிக அளவில் பூர்த்தி செய்கின்றன.கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி பண்டிகைகள் முடிந்துள்ள நிலையில், அக்டோபரில் நவராத்திரி, சரஸ்வதி பூஜையை தொடர்ந்து, தீபாவளி பண்டிகை, கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, பண்டிகைகள் வரிசை கட்டுவதால், நெய், வெண்ணெய் தேவை அதிகரித்து உள்ளது. அதேநேரம், தமிழகத்தில் நெய், வெண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை, கிலோவுக்கு, 25 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சேலம் மாவட்ட தாவர எண்ணெய் விற்பனையாளர்கள் சங்க தலைவர் சந்திரகாசன் கூறியதாவது:தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் நெய், வெண்ணெய் தேவையை, பஞ்சாப், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன. இந்த மாநிலங்களில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால், பால் உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு, வெண்ணெய், நெய் உற்பத்தியில் எதிரொலித்தது.நடப்பாண்டு இம்மாநிலங்கள், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நெய், வெண்ணெயை அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி, தமிழகத்தில்இருந்து வெளிநாடுகளுக்கும் அதிகளவில் வெண்ணெய், நெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெண்ணெய், நெய் விலை, கிலோவுக்கு, 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். வடமாநில வியாபாரிகள், தமிழகத்தின் தனியார் பால் பண்ணைகளில், 1,000 கோடி ரூபாய்க்கு, வெண்ணெய், நெய்க்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். இது, தனியார் பால் பண்ணை உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலகாரங்கள் விலை எகிறும் :தீபாவளி பண்டிகை, அக்., 29ல் கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது பலகாரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், ஆர்டர் வாங்கி வருகின்றன. இந்நிலையில் வெண்ணெய், நெய் விலை உயர்ந்துள்ளதால் அவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பலகாரங்களின் விலை, 20 சதவீதம் உயர்வு ஏற்படும் என, பலகார தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|