பதிவு செய்த நாள்
29 செப்2016
01:48

புதுடில்லி : உலக பொருளாதார குழுமமான, டபுள்யூ.இ.எப்., இந்தாண்டுக்கான, ஜி.சி.ஐ., எனப்படும், சர்வதேச போட்டித் திறன் குறியீட்டை வெளியிட்டு உள்ளது. அதில், இந்தியா, இரண்டாவது ஆண்டாக, 16 இடங்கள் முன்னேறி, 39வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா, 2015 மற்றும் 2014ல் முறையே, 55 மற்றும், 71வது இடங்களில் இருந்தது. ஒரு நாடு, எந்த அளவிற்கு அதன் வளங்களை பயன்படுத்தி, மக்கள் வாழ்வை முன்னேற்றுகிறது என்ற அளவுகோலின் அடிப்படையில், ஜி.சி.ஐ., கணிக்கப்படுகிறது.
அரசு திட்டங்கள்ஒரு நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள், அடிப்படை கட்டமைப்பு, பொருளாதார சூழல், நிதிச் சந்தை மேம்பாடு, அடிப்படை கல்வி, ஆரோக்கியம், தொழில்நுட்பம், வர்த்தகம், கண்டுபிடிப்பு உள்ளிட்ட, 12 பிரிவுகளின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து, ஜி.சி.ஐ., தயாரிக்கப்படுகிறது. இதன்படி, 138 நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், அதனால், பல்வேறு துறைகளில் அதிகரித்துள்ள ஆரோக்கியமான போட்டியும், ஆய்வு செய்யப்பட்டன. அதில், போட்டித் திறன் அதிகமுள்ள நாடுகளில், தொடர்ந்து எட்டாவது முறையாக, ஐரோப்பாவைச் சேர்ந்த, சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இரு இடங்களை, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா தக்கவைத்துக் கொண்டுள்ளன.
இந்தியா, கடந்த இரு ஆண்டுகளில், 32 இடங்கள் முன்னேறி உள்ளது குறித்து, டபுள்யூ.இ.எப்., அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2014 முதல், இந்தியாவின் வர்த்தகச் சூழல், சந்தை பொருளாதாரம் ஆகியவற்றில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளிலும், குறிப்பாக, பொருட்கள் சந்தை, வர்த்தகம், புதிய கண்டு பிடிப்புகள் ஆகியவற்றில், போட்டித் திறன் அதிகரித்து உள்ளது.இதற்கு, மத்திய அரசின் திட்டங்கள், நிதிக் கொள்கைகள் ஆகியவையும், கச்சா எண்ணெய் விலை சரிவும் துணை புரிந்துள்ளன. இந்திய பொருளாதாரம், தற்போது ஸ்திரமாக, ‘ஜி – 20’ நாடுகளிலேயே, மிக அதிகமான வளர்ச்சியை கொண்டதாக உள்ளது.
சீர்திருத்தம்பொதுத் துறை நிறுவனங்களில் செய்த சீர்திருத்தங்கள்; அன்னிய முதலீடுகளை ஈர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்; நிதித் துறை செயல்பாடுகளில், வெளிப்படைத் தன்மையை அதிகரித்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகளால், இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
* ஆய்வு செய்த, 138 நாடுகளில், ‘டாப் – 70’ல், கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, 9 நாடுகளில், 6 நாடுகள் இடம் பிடித்து உள்ளன; தெற்காசியாவைச் சேர்ந்த, 6 நாடுகளில், இந்தியா மட்டுமே, போட்டித் திறன் வளர்ச்சியில் சாதனை படைத்துள்ளது * ‘பிரிக்ஸ்’ நாடுகளில், 28வது இடத்தில் உள்ள சீனாவிற்கு அடுத்ததாக, இந்தியா உள்ளது * பாக்., 2007 முதல், மோசமான பின்னடைவை சந்தித்து வருகிறது.– ஜி.சி.ஐ., அறிக்கை
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|