பதிவு செய்த நாள்
17 அக்2016
07:35

பழக்கங்கள் தான், நம்முடைய தினசரி வாழ்க்கையின் கண்ணுக்குத் தெரியாத கட்டுமானம் என்றும், நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள சுய கட்டுப்பாடு தேவை என்றும் கூறுகிறார், கிரெட்சன் ரூபின். வாழ்க்கையை மாற்றக்கூடிய வகையில் பழக்கங்களை அமைத்துக் கொள்வது பற்றியும், ‘பெட்டர் தன் பிபோர்’ புத்தகத்தில் அவர் விவரிக்கிறார்:
நாம் நம்முடைய பழக்க வழக்கங்களில், 40 சதவீதம் செயல்களை தொடர்ந்து செய்கிறோம். எனவே, பழக்கங்கள் தான் நம்முடைய இருப்பை, எதிர்காலத்தை உருவாக்குகின்றன. பழக்கங்களை மாற்றிக் கொண்டால், நம்மால் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியும்.சுய கட்டுப்பாடு என்பது, நம்முடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அம்சம். சிறந்த சுய கட்டுப்பாடு உள்ளவர்கள் (சுய ஒழுக்கம் அல்லது மன உறுதி) மகிழ்ச்சியானவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் வலுவான உறவுகளை பெற்றிருக்கின்றனர். வெற்றிகரமான பணி வாழ்க்கையை பெற்றிருக்கின்றனர். முரண்கள் மற்றும் மனஅழுத்தத்தை சிறப்பாக கையாள்கின்றனர்.மோசமான பழக்கங்களில் இருந்து விலகி இருக்கின்றனர். சுய கட்டுப்பாடு, நம் மீதே உறுதி கொள்ள வைக்கிறது. பழக்கங்கள் மூலம் நாம் சுய கட்டுப்பாட்டை உருவாக்கி கொள்ளலாம். எனினும், சுய கட்டுப்பாட்டை பயன்படுத்தி, நமது செயல்களை கட்டுப்படுத்த முயலும் போது, பாதி நேரங்களில் மட்டுமே வெற்றி கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தான், பழக்கங்கள் முக்கியமாகின்றன.
பழக்கங்கள் நம்மை முடிவு எடுப்பதில் இருந்தும், சுய கட்டுப்பாட்டை பயன்படுத்துவதில் இருந்தும் விடுவிக்கின்றன. வாய்ப்பு கிடைக்கும்போது, மூளை ஒரு செயலை பழக்கமாக்கி கொள்கிறது. இது, நேரம் மற்றும் முயற்சியை மிச்சமாக்கி, சிக்கலான சூழலை எதிர்கொள்ள உதவுகிறது. பழக்கங்கள், முடிவெடுக்க தடுமாறாத நிலையை, வாய்ப்புகளை எடைபோடும் நிலையை ஏற்படுத்தாமல் இருக்கின்றன. நாம் கவலை கொள்ளும்போது அல்லது அதிக சிக்கல்களுக்கு இலக்காகும்போது, பழக்கங்கள் தான் நமக்கு ஆறுதல் அளிக்கின்றன. பழக்கமான செயல்களில் ஈடுபடும்போது, மனிதர்கள் அதிக கட்டுப்பாட்டை உணர்வதாகவும், பதற்றத்தை குறைவாக உணர்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த காரணத்தினால், நம்முடைய பழக்கங்களை, நல்லவிதமாக அமைத்துக் கொள்வது முக்கியமாகிறது.
பழக்கங்கள், நேரத்தை மிச்சமாக்குகின்றன. ஆனால், பழக்கங்கள் தடைபடும்போது, மூளை கூடுதல் தகவல்களை பரிசீலிக்க வேண்டியிருப்பதால், நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. பழக்கங்கள் விசுவாசமான ஊழியர் போன்றவை. ஆனால், அவை மோசமான எஜமான். பழக்கங்கள் தரும் பலன்கள் நமக்குத் தேவை என்றாலும், நமது பழக்கங்களிலேயே சிறைபட்டு விடக்கூடாது.நம்முடைய பழக்கங்களை மாற்றிக்கொள்ளும் போது, வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறோம். நமக்குத் தேவையான பழக்கங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். மனஉறுதி மூலம், நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு, பின்னர் பழக்கங்கள் நம் வாழ்க்கையை கட்டுப்படுத்த அனுமதிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|