பதிவு செய்த நாள்
17 அக்2016
07:36

வட்டி விகிதம் குறைந்து வரும் சூழலில், கடன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இம்மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட முதல் நிதி கொள்கை அறிக்கையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதமான, ‘ரெப்போ ரேட்’ 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதையடுத்து, ரெப்போ ரேட், 6.25 சதவீதமாக இருக்கிறது. வட்டி விகித குறைப்பால், வைப்பு நிதி உள்ளிட்ட நிலையான வருமான வழி முதலீடுகளுக்கான வட்டி விகிதம், மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும் வாய்ப்பு உள்ளது. குறைந்த வட்டி விகித சூழலில், இரு தரப்பினருமே தங்கள் அணுகுமுறையை பரிசீலித்து, தேவையான மாற்றங்களை செய்வது அவசியம் என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
வட்டி விகிதம்ரிசர்வ் வங்கி, பணவீக்கம் உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்து, அதற்கேற்பவே வட்டி விகிதத்தை அறிவிக்கிறது. தற்போது பணவீக்கம் இலக்கிற்கு ஏற்ப கட்டுக்குள் இருப்பதால், வரும் மாதங்களில் மேலும் ஒரு முறை வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், சர்வதேச போக்குகளும் இதற்கு சாதகமாக அமைய வேண்டும். வட்டி விகித சுழற்சியின் முடிவுக்கு வந்திருப்பதாக ஒரு தரப்பினர் கருதினாலும், அடுத்த, 18 மாத காலத்தில், வட்டி குறைப்பு தொடரலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.குறைந்த வட்டி விகித போக்கால், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே, முதலீடு மூலம் நிலையான வருமானம் பெற வைப்பு நிதிகளை நாடுபவர்கள், அதிக லாபம் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
வைப்பு நிதிகள்எனினும் இந்த வகை முதலீட்டாளர்கள், எந்த முடிவையும் தங்களுடைய ‘ரிஸ்க்’ தன்மையை கருத்தில் கொண்டே மேற்கொள்ள வேண்டும் என, வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர். பொதுவாக, வட்டி விகிதம் குறையும்போது, முதலீட்டாளர்கள் தங்கள், ‘ரிஸ்க்’ தன்மைக்கு பொருந்தாத முதலீட்டு சாதனங்களில் முதலீடு செய்ய முற்படுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும் என, வல்லுனர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலையில், குறைந்த வட்டி விகிதம், தரக்கூடியதாக இருந்தாலும் கூட, தங்கள் ‘ரிஸ்க்’ தன்மைக்கு ஏற்ற முதலீட்டு வாய்ப்புகளையே நாட வேண்டும். கடந்த கால வட்டி வருமானத்தை இப்போது கிடைக்கும் பலனுடன் ஒப்பிட்டு முடிவு எடுக்க நினைப்பவர்கள், வரும் மாதங்களில் இந்த பலன்கள் மேலும் குறையும் நிலை வரலாம் என்பதையும், மனதில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
அதிக வருமானவரி வரம்பில் இருப்பவர்கள், வரி இல்லா பத்திரங்களை பரிசீலிக்கலாம். அதேபோல குறைவான வருமான வரி பிரிவில் இருப்பவர்கள், அதிக ரேட்டிங் கொண்ட நம்பகமான கார்ப்பரேட் டிபாசிட்டுகளை பரிசீலிக்கலாம் என்கின்றனர். சிறுசேமிப்பு திட்டங்களைப் பொறுத்தவரை, மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம், 8.5 சதவீத பலனை அளிப்பதால், வயதானவர்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. பி.பி.எப்., வட்டி விகிதம் குறைந்தாலும், அதன் நீண்டகால முதலீட்டு தன்மை மற்றும் வரிச்சலுகை உள்ளிட்ட பலன்களை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.
கடன்கள்‘டெப்ட் பண்ட்’ எனப்படும் கடன் சார்ந்த நிதிகளில் முதலீடு செய்துள்ளவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு இதில் தொடர்ந்தால் வரிச் சலுகைகளை பெறலாம். குறுகிய கால மற்றும் மத்திய கால பாண்ட் நிதிகளில் முதலீடு செய்பவர்கள், பலனை மட்டும் பார்க்காமல், அவற்றின் பாதுகாப்பு அம்சத்தையும் கவனிக்க வேண்டும். வீட்டுக்கடனை பொறுத்தவரை, இந்த ஆண்டு துவக்கம் முதல் வட்டி விகிதம், 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைந்திருக்கிறது. வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பலன் அளிக்க நினைத்தால், வட்டி விகிதம் இன்னும்கூட குறையலாம். புதிதாக வீட்டுக்கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த பலன் தானாக கிடைக்கும். ஆனால், ஏற்கனவே கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும்.அதிலும் பழைய வட்டி விகித கணக்கீடு முறையில் கடன் பெற்றவர்கள், தற்போதைய வட்டி விகிதத்திலேயே தொடரும் நிலை இருக்கலாம். இந்த வாடிக்கையாளர்கள், வீட்டுக் கடனை மாற்றிக் கொள்வது பற்றி பரிசீலிக்கலாம். ஆனால், செயல்முறை கட்டணம், நிபந்தனைகள் உள்ளிட்டஅம்சங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|