பதிவு செய்த நாள்
24 அக்2016
07:38

நிதி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கான மாறுபட்ட, புதுமையான வழியாக 21 நாட்களில், நிதி பழக்கங்களை மாற்றிக்கொள்ளும், 21 நாட்கள் நிதி விரதம் எனும் புதுமையான வழிமுறையை, மிச்சிலி சிங்லேட்டரி, ‘தி 21 டே பைனான்சியல் பாஸ்ட்’ புத்தகத்தில் முன் வைக்கிறார்:
உணவுக் கட்டுப்பாடு போல, நிதி கட்டுப்பாட்டிற்கான வழிகளை, விரதம் இருப்பது போல மேற்கொள்ள வேண்டும் என்கிறார். நிதி விரதம் இருக்கும் நாட்களில், தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவது; அனாவசிய மான எதையும் வாங்காமல் இருப்பது; கடன் அட்டையை மறப்பது ஆகிய கண்டிப்பான விதிகள், இந்த வழிமுறையின் அடிப்படையாக அமைகிறது.இந்த நாட்களில், மால்களின் பக்கம் போகாமல் இருக்க வேண்டும். வேறு எந்த வகையான வீண் செலவுகளாக அமையக் கூடியவற்றையும் கடைகளில் வாங்கக் கூடாது. பொருட்களை வாங்காமல் இருக்கும் உறுதியுடன் கூட கடைகளுக்கு செல்லக் கூடாது. ஏனெனில், தேவையில்லாத ஒன்றை வாங்கும் துாண்டுதல் ஏற்படலாம். ரெஸ்டாரன்ட்டுகளில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அலுவலக மதிய உணவுக்கும் இது பொருந்தும். காபி வாங்கி சாப்பிடுவதையும் தவிர்க்கவும். பரிசுப் பொருட்களையும் வாங்கக் கூடாது. இந்த நாட்களில், பிறந்த நாள் விழா அல்லது திருமண விழாக்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டாலும், இந்த விதி பொருந்தும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவர்களிடம் உங்கள் நிதி விரதம் பற்றி எடுத்துக் கூறுங்கள். பொருட்கள் தவிர, வேறு எப்படி பரிசளிக்க முடியும் என, யோசியுங்கள். அத்தியாவசிய தேவை தவிர, மற்ற செலவுகளை குறைப்பதே, இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.
செலவுகளை குறைத்துக் கொள்வது, இதன் ஒரு பகுதி தான். அடுத்த பகுதி, கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது. கார்டுகள் மூலம் பணம் செலுத்துவது வாங்குவதை மிகவும் எளிதாக்குகிறது. இது, கடனுக்கான பாதையாக அமைகிறது.
இந்த நாட்களில் செய்யக்கூடியவை: உணவு மற்றும் மருந்து போன்ற முக்கிய பொருட்களை வாங்கலாம். தனிப்பட்ட பொருட்கள், ஆடைகளை வாங்கலாம். குடும்பம் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். மற்றபடி பொருட்களை வாங்குவது மற்றும் செலவு செய்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள், நீங்கள் பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்கிறீர்கள் என்பது பற்றி யோசிக்க வைக்கும். கடன் அல்லது செலவு பழக்கங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் பற்றி சிந்திக்க வைக்கும். உங்கள் நிதி வாழ்க்கையின் திருப்பு முனையாகவும் அமையும். இந்த முயற்சியை வெற்றிகரமாக மேற்கொள்ள, உங்கள் அனுபவங்களை குறிப்பேட்டில் எழுதி வைக்கலாம். கட்டுப்பாடு முடிந்த பின், அவற்றை படித்து பார்க்கும் போது, உங்களுக்கு புதிய புரிதல் உண்டாகும். இது ஒரு சவாலான விஷயம் தான். நிதி விரதம் இருப்பதன் மூலம், உங்கள் நிதி வாழ்க்கையை பாழாக்கி கொண்டிருக்கும் பழக்கங்களை உதறித்தள்ளி, உங்கள் நிகர மதிப்பை அதிகரிப்பதை நோக்கி முன்னேறலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|