பதிவு செய்த நாள்
24 அக்2016
23:10

புதுடில்லி : நாட்டின் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், புதிய சந்தை வாய்ப்புகளை கைப்பற்ற, மத்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
ஜவுளி ஏற்றுமதி, 2015 – 16ம் நிதியாண்டில், 4,000 கோடி டாலராக உள்ளது; இது, 2014 – 15ல், 4,140 கோடி டாலராக இருந்தது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, வங்கதேசம், வியட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளின் கடுமையான போட்டி போன்றவற்றால், ஜவுளித் துறையின் ஏற்றுமதி மிகவும் மந்தமாக உள்ளது. இந்தியா, அதிகளவில், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. அவை தவிர்த்து, தென் அமெரிக்கா, ரஷ்யா, மேற்கு ஆசியாவின் சில நாடுகளிலும், ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, ஜவுளி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரஷ்யா, பெரும்பான்மை ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு, சீனாவை சார்ந்துள்ளது. சீனாவில், தொழிலாளர் ஊதியச் செலவினம் அதிகரித்து உள்ளது. அதனால், சீன ஜவுளிகள், ஆயத்த ஆடைகள் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இது, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஜவுளிச் சந்தையில், இந்தியா ஆழமாக காலுான்ற கிடைத்துள்ள வாய்ப்பாகும். அது போல, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில், அரசியல் ஸ்திரத்தன்மை உள்ள, சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலும், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியை அதிகரிக்க, திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
இதற்காக, அந்நாடுகளின் முக்கிய நகரங்களில், தொழிலதிபர்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தவும், வர்த்தக பயன்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளவும், ஜவுளி அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், ஜவுளி, ஆயத்த ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி உயரும். உள்நாட்டு ஜவுளித் துறையில், அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கும்; இது, ஜவுளித் துறையில், நேரடியாகவும், மறைமுகமாகவும், ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறைக்கு, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான, சிறப்பு ஊக்கச்சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில், இத்துறையில், ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அன்னிய நேரடி முதலீட்டை, 1,100 கோடி டாலரில் இருந்து, 3,000 கோடி டாலராக உயர்த்தவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
‛மத்திய அரசு, புதிய தேசிய ஜவுளிக் கொள்கையை, விரைவில் வெளியிட உள்ளது. இக்கொள்கை, 2024 – 25ம் நிதியாண்டில், ஜவுளி ஏற்றுமதியை, 30 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கவும், கூடுதலாக, 3.50 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் துணை புரியும்’
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|