பதிவு செய்த நாள்
28 அக்2016
04:05

புதுடில்லி:டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா – சைரஸ் மிஸ்திரி இடையிலான மோதலின் பின்னணியில், நிறுவன விதிமுறைகள் மீறப்பட்டனவா; நிதி முறைகேடுகள் நடைபெற்றனவா என்பது குறித்து, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா குழும நிறுவனங்களை உள்ளடக்கிய, டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பதவியில் இருந்து, சைரஸ் மிஸ்திரி, சில தினங்களுக்கு முன் நீக்கப்பட்டார். தற்காலிக தலைவராக, மீண்டும் ரத்தன் டாடா பொறுப்பேற்று உள்ளார்.இதையடுத்து, சைரஸ் மிஸ்திரி, ரத்தன் டாடா மீது பல்வேறு புகார்களை தெரிவித்து, டாடா சன்ஸ் இயக்குனர் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:கடந்த, 2012 டிசம்பரில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற போது, எனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படும் என, ரத்தன் டாடா தெரிவித்திருந்தார். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின், விதிமுறைகள் திருத்தப்பட்டன. ஏர் ஏஷியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செயல்பட, ரத்தன் டாடா வற்புறுத்தினார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா, சிங்கப்பூர் நாடுகளில் இல்லாத நபர்களுக்கு, 22 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது, சமீபத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடுமையான இழப்பில் உள்ள, ‘நானோ’ கார் திட்டத்தை கைகழுவ வேண்டும் என்றேன். அவ்வாறு செய்தால், நானோ தொழிற்சாலை மூலம், டாடா முதலீடு செய்துள்ள, மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பும் சாதனங்கள் சப்ளை முடங்கும் என்பதால் மூடவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து, டாடா குழுமம், நிறுவன சட்டங்களை மீறியுள்ளதா; சைரஸ் மிஸ்திரி நீக்கத்திற்கு முன், டாடா நிறுவன பங்குகள் விலையில், செயற்கையாக ஏற்ற, இறக்கங்கள் நிகழ்ந்தனவா என்பது குறித்தும், ‘செபி’ விசாரிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|