பதிவு செய்த நாள்
20 நவ2016
00:24

புதுடில்லி:‘‘இந்தியா மற்றும் அதன் சேவைகள் துறையின் பங்களிப்பின்றி, வளர்ந்த நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் நகராது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
அதிகளவில் முதலீடு:அவர், டில்லியில், பொருளாதார கருத்தரங்கு ஒன்றில் பேசியதாவது:மத்திய அரசு, தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையில், வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்கு விக்கும் நடவடிக்கைகளில், முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.
தயாரிப்பு மற்றும் சேவைகள் துறைக்கு தேவையான வல்லுனர்களை உருவாக்க, இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு, அதிகளவில் முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசு, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், இளைஞர்களின் திறனாற்றலை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்கள் மூலம், வரும் ஆண்டுகளில், பல்வேறு துறைகளுக்கு தேவையான வல்லுனர்கள் உருவாவர். அவர்களில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையில், ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெறுவர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தயாரிப்புத் துறையின் பங்களிப்பு, 13 – 14 சதவீதமாக உள்ளது. இதை, வரும் ஆண்டுகளில், 25 சதவீதமாக உயர்த்த, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, சேவைகள் துறை உள்ளது. இத்துறையின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதை, மேலும் உயர்த்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. சில நாடுகள், உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளன.
தயவின்றி நகராது:இது, இந்தியாவிற்கு சவாலாக இருக்கும் என்பதில், சிறிதும் சந்தேகம் இல்லை. இருந்த போதிலும், சேவைகள் துறையை பொறுத்தவரை, அதில் ஜாம்பவானாக விளங்கும் இந்தியா போன்ற ஒருசில நாடுகளை, வேறு எந்த நாடும் ஒதுக்கி விட முடியாது.
இந்தியா மற்றும் அதன் சேவைகள் துறையின் பங்களிப்பின்றி, எதையும் செய்ய முடியாது என்பது, அந்நாடுகளுக்கு தெளிவாக தெரியும். வளர்ந்த பல நாடுகளின் பொருளாதாரம், இந்திய சேவைகள் துறையின் தயவின்றி நகராது.இந்திய ஐ.டி., துறையைச் சேர்ந்த வல்லுனர்கள், வெளிநாடுகளில் தற்காலிகமாக பணியாற்றுவதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து, பல நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|