பதிவு செய்த நாள்
26 நவ2016
07:42

புதுடில்லி : ‘‘நலிவுறும் நிலையில் உள்ள, விசைத்தறி துறையை மேம்படுத்த, இரு புதிய திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன,’’ என, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, லோக்சபாவில் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் பேசியதாவது:மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள, விசைத்தறி தொழிற்சாலைகள், குறைந்த உற்பத்தித் திறனில் செயல்பட்டு வருகின்றன. அதிகரித்துள்ள மூலப் பொருட்கள் செலவினம், ஜவுளி கொள்முதலில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவற்றால், இதர, தொழிற்பேட்டைகளில் உள்ள, ஒருசில விசைத்தறி தொழிற்சாலைகள், பாதி நாட்கள் தான் இயங்குகின்றன. இதை கருத்தில் கொண்டு, ‘புதிய விசைத்தறி கடன் திட்டம்’ மற்றும் ‘சூரிய மின் சக்தி திட்டம்’ என்ற, இரு புதிய ஊக்குவிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து, அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
ஜவுளி அமைச்சகம், நாட்டின் ஆயத்த ஆடைகள் துறையின் மேம்பாட்டுக்காக, 6,000 கோடி ரூபாய்க்கு, சிறப்பு ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஜவுளித் துறையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசுகளுக்கு செலுத்திய வரியை திரும்ப பெறவும், வருமான வரிச் சட்டம், 80 ஜே.ஜே.ஏ.ஏ., பிரிவின் கீழ், வரிவிலக்கு கோரும் சலுகையும் அளிக்கப்படுகிறது. தொழிலாளர் சட்ட விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. அது போல, விசைத்தறி துறையின் வளர்ச்சிக்கும், பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை, அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. சாதாரண விசைத்தறி தொழிலகங்களை, நவீனமயமாக்கும் திட்டத்துடன் விசைத்தறியாளர்கள் குழு, தொழிற்கூடம் கட்ட, ‘குழு தொழிற்கூட திட்டம்’ மூலம், நிதியுதவியும் வழங்கப்படுகிறது. அத்துடன், ஐ.எஸ்.பி.எஸ்.டி., திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த விசைத்தறி துறையின் வளர்ச்சிக்கு, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, விற்பனையாளர் – நுகர்வோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தல், நுாலிழை வங்கிகள் மற்றும் சேவை மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின், ஜவுளித் துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து, விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. சமூக பாதுகாப்புக்காக, ஜவுளித் துறையினருக்கு, குழு காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|