பதிவு செய்த நாள்
29 நவ2016
05:18

இஸ்லாமாபாத்:இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு, பாகிஸ்தான் அரசு தடை விதித்திருக்கிறது.இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய எல்லை பிரச்னைகள் காரணமாக, இந்தியாவிலிருந்து பருத்தி மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்திருக்கிறது பாகிஸ்தான்.
இது குறித்து பேசிய, பாகிஸ்தான் பயிர் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், வாகா எல்லையிலிருந்தும் கராச்சி துறைமுகம் வழியாகவும் வரும் காய்கறிகள் மற்றும் பருத்தி ஆகியவற்றுக்கு, தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.பருத்தி இறக்குமதியில் ஈடுபட்டுள்ளவர்கள் தரப்பில், எந்த முன்னறிவிப்பும் இன்றி, இத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இவ்விவகாரம் குறித்து பேசிய, பயிர் பாதுகாப்பு துறை தலைவர், இம்ரான் ஷாமி கூறியதாவது:எங்கள் நாட்டு விவசாயிகளை பாதுகாக்க, நாங்கள் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்திருக்கிறோம். எங்களிடம் போதுமான அளவுக்கு காய்கறி சேமிப்பு இருக்கிறது. தட்டுப்பாடு ஏற்படும்போது மட்டும் தான் இறக்குமதி செய்து கொள்கிறோம்.ஆனால், பருத்திக்கான தடைக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன.நாங்கள் பருத்தியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தவில்லை. இந்திய பருத்தி, எங்களுடைய உயிரி பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இல்லை என்ற அறிக்கைகளால் நிறுத்தி வைத்திருக்கிறோம்.
இது குறித்து விசாரித்து, அத்தகைய பிரச்னைகள் எதுவும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால், தடையை நீக்கிவிடுவோம்.எங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இருப்பதற்கான சான்றிதழை பெற்ற பருத்தியை மட்டுமே இறக்குமதியாளர்கள் சாலை வழியாகவோ, துறைமுகம் மூலமாகவோ இறக்குமதி செய்ய இயலும். இதற்கிடையே, இந்த தடை காரணமாக, பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக, அத்துறையில் இருப்பவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:எங்கள் துறைக்கு, ஒரு கோடியே, 40 லட்சம் பொதிகள் தேவை. ஆனால், இந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி, ஒரு கோடியே, 12 லட்சம் பொதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 30 லட்சம் பொதிகள் தட்டுப்பாடு ஏற்படும். இந்நிலையில் இந்த தடை எங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஏற்றுமதிக்கான செலவினங்களும் அதிகரித்துவிடும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|