பதிவு செய்த நாள்
29 நவ2016
05:20

ஐதராபாத்:‘‘அமெரிக்க அரசு, உள்நாட்டினரின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், அயல்நாட்டவருக்கு வழங்கும் பணிகளை குறைத்தாலும், அதனால், இந்திய, ஐ.டி., துறைக்கு பெரிய பாதிப்பு இருக்காது,’’ என, இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரும், தலைமை நிதி அதிகாரியுமான, டி.வி.மோகன்தாஸ் பாய் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது:அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ‘உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, ‘எச் 1 பி’ விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என, டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். அவர் அதிபராக பதவியேற்க உள்ளதால், ‘எச் 1 பி’ விசா ரத்து செய்யப்படும் பட்சத்தில், அமெரிக்காவில் உள்ள இந்திய, ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படும் என, கூறப்படுகிறது.
என்னை பொறுத்தவரை, இந்த பாதிப்பு, மிகக் குறைவாகவே இருக்கும் என, கருதுகிறேன்.அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில், ஐ.டி., வல்லுனர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. அதனால், அந்நாடுகளில் இருந்து, புதுமையான கண்டுபிடிப்புகள் தொடர்பான பணிகள், அதிகளவில், வெளிநாடுகளுக்குச் செல்லும். இதனால் ஏற்படும் அதிகப்படியான செலவினங்களை குறைக்க, பணிகளில், ‘ரோபோ’ சாப்ட்வேர்களை புகுத்துவதற்கான தேவை எழும். இதன் காரணமாக, அடுத்த, 3 – 4 ஆண்டுகளில், வெளிநாடுகளில் இருந்து அதிக சாப்ட்வேர் பணிகளை, இந்திய, ஐ.டி., நிறுவனங்கள் பெறும்.
அதே சமயம், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், எதிர்கால வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை அடையாளம் காணவும், மேம்பட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து, புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும். ஐ.டி., துறை, தனக்கு எதிரான மாற்றங்களை எதிர் கொள்வதை விட, அடுத்தகட்ட மாற்றத்திற்கு, தாவ வேண்டும். அத்துறை நிறுவனங்கள் மதிப்பிட்டதை விட, வெளிநாடுகளால் ஏற்படக் கூடிய தாக்கம் அதிகமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அதை சமாளிக்கும் வகையில், இந்திய, ஐ.டி., துறை, நவீன தொழில்நுட்பங்களுக்கு மிக வேகமாக மாற வேண்டியது அவசியம்.
இதன் மூலம், எத்தகைய பாதிப்பில் இருந்தும் தப்பலாம். ஐ.டி., துறை, மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்து விட்டதால், அதன் வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. எனினும், தற்போது உள்ளதை விட, மோசமடைய வாய்ப்பில்லை. பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உள்ள, 35 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, 2 – 3 சதவீதமாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, இந்திய, ஐ.டி., துறை, ஆண்டுக்கு, 7 – 9 சதவீதம் வளர்ச்சி கண்டு வருவது பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|