பதிவு செய்த நாள்
12 டிச2016
05:28

ஸ்மார்ட் போன்கள் மூலம், பணப் பரிவர்த்தனை செய்ய உதவும், ‘மொபைல் வாலெட்’களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்றஅறிவிப்புக்கு பின், ரொக்கமில்லா பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், வாலெட்களின் தேவையும் அதிகம் உணரப்படுகிறது.
வாலெட்கள் மூலமான பரிவர்த்தனைக்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கியும், வாலெட்களுக்கான வரம்பை மாதம் ஒன்றுக்கு, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உள்ளது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, வாலெட்கள் மூலம் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மொபைல் வாலெட் பயன்பாட்டின் போது, பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதும் முக்கியமாகிறது.
மால்வேர் கவனம்
மொபைல் வாலெட்டை பாதுகாப்பாக பயன்படுத்துவது, ஒருவர் தன் போனை எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்தே அமைகிறது. மால்வேர் போன்ற பாதிப்பிற்கு, போன் இலக்கானால், வாலெட்களும் பாதிப்புக்குள்ளாகலாம். எனவே, அதிகாரபூர்வமில்லாத இணையதளங்களில் இருந்து செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்த வேண்டும்.
இதே போல, மொபைல் போன் தொலைந்து போனாலும், பிரச்னை ஏற்படலாம். பொதுவாகவே, போன்கள் தொலையும் போது, அதில் உள்ள தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. தற்போது, போன் பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தப்படுவதால், போன் தொலைந்து போவது, மேலும் ஆபத்துகளை கொண்டிருக்கிறது.
இதை தவிர்க்க, ஸ்மார்ட் போனில், ரகசிய பின் எண் அல்லது லாக் செய்யும் வசதியை பயன்படுத்தி, மற்றவர்கள் அதில் உள்ள தகவல்களை அணுக முடியாமல் செய்ய வேண்டும். மேலும், போன் தொலைந்தவுடன், சிம் கார்டை முடக்குவது போலவே, வாலெட் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் பயன்பாட்டை முடக்க வேண்டும்.
போனில் உள்ள மொபைல் வாலெட் உள்ளிட்ட, முக்கிய செயலிகளை ஒரே கோப்பில் வைத்து அதற்கு பாஸ்வேர்டு பூட்டு போடும் வசதியை அளிக்கும் ஆப்லாக் போன்ற செயலிகளையும் பயன்படுத்தலாம். போனுக்கான பாஸ்வேர்டுடன் சேர்த்து, இவை இரண்டு அடுக்கு பாதுகாப்பாக அமையும்.
ஒரே கார்டு போதும்
உங்கள் போன் நடுவே சிறிது நேரம் கையை விட்டு போயிருந்தால் கூட, அதில் நிதி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என, பார்க்கவும். ஏனெனில், தாக்காளர்கள் அதற்குள் போனுக்குள் மால்வேர் நிறுவி, முக்கிய தகவல்களை திருட வழி செய்திருக்கலாம். கம்ப்யூட்டர் போலவே, போனிலும் வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவுவது அவசியம்.
பழைய போனை விற்பனை அல்லது எக்சேஞ்சில் மாற்றுவதையும் தவிர்க்க வேண்டும் என, வல்லுனர்கள் கூறுகின்றனர். அதில் உள்ள தரவுகளை எல்லாம் அழித்துவிட்டாலும் கூட, அதி நவீன மென்பொருள் கொண்டு அவற்றை விஷமிகள் எடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. வாலெட்களில் பணத்தை மாற்ற, பல டெபிட் கார்டுகளை பயன்படுத்தாமல், ஒரு கார்டை பயன்படுத்த வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|