பதிவு செய்த நாள்
19 டிச2016
05:25

அளவுக்கு அதிகமாக செலவு செய்யும் பலர், செலவு பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும், இதுவே மோசமான நிதி நிர்வாகத்திற்கான மூலக்காரணமாக அமைகிறது என்றும், இவற்றில் இருந்து மீள்வதற்கான வழிகளையும், தி மணி டிராப் புத்தகத்தில் ரான் கல்லன் விவரிக்கிறார்;அதிகமாக செலவு செய்பவர்கள், பொருளியல் தேவை மற்றும் செலவுகளுக்கு அடிமையாக இருக்கின்றனர். இது போதை பழக்கம் போலவே தீங்கானது. ஒரு சமூகமாக நம் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பணத்தின் ஆற்றல் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். பல நேரங்களில், பணத்தால் சரி செய்ய முடியாத விஷயங்களை, நாம் பணத்தை கொண்டு தீர்வு காண முயல்கிறோம். இது போன்ற செயல்களே பணக்கோளாறுகளுக்கு காரணமாக அமைகிறது.பணக்கோளாறுகளின் தன்மை அடிப்படையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களை நான்குவிதமாக பிரிக்கலாம். முதல் ரகம், செலவாளிகள். அதாவது அளவுக்கு மீறி செலவு செய்பவர்கள். அதிகம் செலவு செய்வது என்பது உண்மையில் பணத்துடன் தொடர்புடையது அல்ல. அது உணர்வு சார்ந்தது. பெரும்பாலும், பலரும், குறிப்பிட்ட சம்பளம் வாங்குபவர்கள் இப்படி தான் செலவிட வேண்டும் எனும் எண்ணத்தின் அடிப்படையில் செலவு செய்கின்றனர். அனேகமாக இந்த எண்ணம் தவறாகவே இருக்கிறது. வேலையே கதி என இருப்பவர்கள், இரண்டாவது ரகத்தினர். இவர்கள் தங்கள் செலவு பழக்கத்தை, இலக்கு, போட்டி, சமூக நிர்ப்பந்தம் என, பல காரணங்களுக்கு பின்னே மறைத்துக்கொள்கின்றனர். இவர்களுக்கு தங்கள் வேலையில், போதும், என்ற எண்ணம் இல்லாததே, இப்படி மேலும் மேலும் தேட வைக்கிறது.இதே போல, பணம் மீது மோகம் கொண்டிருப்பவர்கள் மற்றும் குறைவாக சம்பாதிப்பவர்கள் என, மேலும் இரு பிரிவினர் உள்ளனர். பண மோகம் கொண்டவர்கள் பணம் தொடர்பாக பகல் கனவு காண்கின்றனர். போதிய அளவு சம்பாதிக்காதவர்கள் சுய கவுரவம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அதிகம் சம்பாதிக்க தகுதியற்றவர்கள் என, நினைக்கின்றனர்.இந்த கோளாறுகள் தனிநபர்களிடம் இருக்கலாம்; தம்பதிகளில் ஒருவரிடையே இருக்கலாம்; இருவரிடமும் இருக்கலாம். இவற்றில் இருந்து மீள்வதற்கான வழி, பண விஷயத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்து, தெளிவான செலவு திட்டத்தை கொண்டிருப்பதாகும். தெளிவான செலவு திட்டமே, செலவுகளை குறைப்பதற்கான வழியாகும். செலவுகளில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து அடைப்பது முக்கியம். ஒரு குறிப்பேட்டில் செலவு பழக்கங்களை குறித்து வைப்பதும் நல்லது. செலவு பிரச்னை கொண்ட பலரும் நேர பிரச்னையும் பெற்றிருக்கின்றனர். குறிப்பாக பணியில் மூழ்கியிருப்பவர்களுக்கு இது பிரச்னையாக அமைகிறது. எனவே, நேர நிர்வாக திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.எதிர்பாரா செலவுகளை சமாளிப்பதற்கான அவசர நிதியை உருவாக்கி கொள்வது மற்றும் ஓய்வு கால நிதி ஆகியவை அவசியம். ஆனால் இவற்றில் மிகையான கவனத்தை தவிர்க்கவும். பணத்தின் மோகம் கொள்வதில் இருந்து விடுபட்டு, வாழ்க்கையை முழுவதும் அனுபவிப்பதே முக்கியம் என உணர வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|