பதிவு செய்த நாள்
19 டிச2016
05:32

மொபைல் வாலெட்கள் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், அவற்றை கையாளும் போது ஏற்படக்கூடிய பிரச்னைகள் எவை என்றும், அவற்றுக்கு தீர்வு காண, முறையீடு செய்யும் வழிமுறைகளை அறிந்திருப்பதும் அவசியமாகிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வும், பயன்பாடும் அதிகரித்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் மூலம் பணம் செலுத்த உதவும் மொபைல் வாலெட்களின் பயன்பாடும் கணிசமாக உயர்ந்துள்ளது. வாலெட் நிறுவனங்கள் மக்களின் கவனத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை நோக்கி ஈர்க்க, பல மடங்கு வேகத்துடன் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளும் வாலெட் உள்ளிட்ட, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பெரிய அளவில் முன்னிறுத்தி வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், இந்த சேவைகள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் பிரச்னைகளை வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் நிலை உருவாகலாம்.
வங்கிச் சேவையில் ஏதேனும் பிரச்னைகள், குறைகளை எதிர்கொள்ளும் போது, அவற்றுக்கு தீர்வு காண வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகள் உள்ளன. வங்கிக்கு தொலைபேசி மூலம் அல்லது இ – மெயிலில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரலாம். கிளைக்கு நேராகச் சென்று மேலாளரிடம் முறையிடலாம். இத்தனைக்கு பிறகும் தீர்வு கிடைக்காவிட்டால், ஓம்பட்ஸ்மன் எனப்படும், வங்கி நடுநிலையாளரை அணுகலாம். இல்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
வாலெட் அனுபவம்இதே போல, டிஜிட்டல் வாலெட்களை பயன்படுத்தும் போது, சேவை தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது வாடிக்கையாளர் என்ன செய்ய வேண்டும்? எனும் கேள்வி எழுகிறது. இது வாடிக்கையாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் என, இருதரப்பினருக்குமே புதிய சூழலாகும். முதலில் வாலெட் பயன்பாட்டில் என்ன எல்லாம் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வாலெட்கள் இடையிலான பரிவர்த்தனை முற்றுபெறாமல் தோல்வியில் முடிய வாய்ப்பிருப்பதாக துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர். பொதுவாக பரிவர்த்தனை தோல்வி அடையும் போது, பணம் உடனே செலுத்தியவர் கணக்கிற்கு திரும்பிவிடும். வாலெட்டில் இருந்து வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் போது, இவ்வாறு நிகழாமல் தாமதமாகலாம்.
வங்கி சர்வர் போன்றவை வேகம் குறைந்திருக்கும் போது இவ்வாறு நிகழலாம். இதே போலவே பணத்திற்கான கோரிக்கை சமர்ப்பித்த உடன், இடைப்பட்ட என்.பி.சி.ஐ., அமைப்பின் ஸ்விட்சில் தாமதம் ஏற்பட்டாலும் வங்கியிடம் இருந்து உறுதிப்படுத்தும் தகவல் வராமல் போகலாம். நெட் பேங்கிங் மூலம் வாலெட்களில் இருந்து கோரிக்கை அனுப்பி வைக்கப்படும் போதும், ஏதேனும் சிக்கல் உண்டாகலாம். வாலெட்கள் இத்தகைய கோரிக்கைகளை கையாள, 24 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அதன் பிறகு பிரச்னை இருந்தால் வங்கியை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய முயற்சிக்கும். சர்வர் வேகம் குறைவது அல்லது இணைய இணைப்பு பிரச்னை காரணமாக சேர வேண்டிய தொகை இடையே காணாமல் போனதாக தோன்றலாம். இப்படி தோன்றினாலும், உண்மையில் அந்த தொகை கணக்கில் இருப்பதை பின்னர் உணரலாம் என, வல்லுனர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
முறையீடு செய்வது எப்படி?ஆக வாலெட் பயன்பாட்டில் வாடிக்கையாளர்கள் சேவை தொடர்பான குறைகளை சந்திக்க நேரலாம். சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இமெயில் மூலம் புகார் தெரிவித்து நிவாரணம் கோரலாம் என்றாலும், வாலெட் சேவைக்கு என்று நடுநிலையாளர் இல்லாத போது என்ன செய்வது? குறைகளுக்கு நிவாரணம் காணும் வழிமுறை வாலெட் நிறுவனங்களிடையே மாறுபடலாம். ஆனால் பொதுவாக வாலெட் நிறுவனங்களுக்கு பங்குதாரர் வங்கிகள் இருக்கும். அந்த வங்கிகள் பின்பற்றும் வாடிக்கையாளர் சேவை தொடர்பான நெறிமுறைகளை அவையும் பின்பற்றலாம். வாலெட் நிறுவனங்களின் கால்சென்டர்களையும் தொடர்பு கொள்ளலாம். வாலெட் செயலிகள் மூலம் கூட புகார்களை தெரிவிக்கும் வசதி இருக்கிறது. இதற்கான தொலைபேசி எண்களும் கூட இருக்கின்றன. இமெயில் அல்லது நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்கள் மூலமும் புகார் தெரிவிக்கலாம் என்கின்றனர். எனினும் வாடிக்கையாளர் சேவையில் வாலெட் நிறுவனங்கள் இன்னும் முனைப்பு காட்ட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|