பதிவு செய்த நாள்
20 டிச2016
23:44

புதுடில்லி : ‘மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நடப்பு மூன்றாம் காலாண்டில், நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, நுகர்பொருள் தயாரிப்பு துறையின் வளர்ச்சி, மந்தநிலையில் இருந்தது. இந்தாண்டு, பரவலாக பெய்த பருவமழையால், கிராமப்புற மக்களிடம் பணப் புழக்கம் சற்று அதிகரித்து, அவர்கள் நுகர்பொருளுக்காக கூடுதலாக செலவிடும் சூழல் உருவானது. இதனிடையே, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்ந்து, அவர்களின் செலவழிப்பு திறன் அதிகரித்தது.
தற்காலிகமானது:இது போன்ற காரணங்களால், நுகர்பொருள் துறை, சிறப்பாக வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு, நவ., 8ல் அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், இந்த எதிர்பார்ப்பு பொய்த்து விட்டதாக நுகர்பொருள் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனினும், இந்த பாதிப்பு தற்காலிகமானது என்றும், வரும், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், விற்பனை சூடு பிடிக்கும் என, அவை நம்பிக்கை தெரிவித்துள்ளன.
சவ்கதா குப்தா, நிர்வாக இயக்குனர், மாரிக்கோ: நடப்பு மூன்றாவது காலாண்டை விட, நான்காவது காலாண்டில், வளர்ச்சி நன்கு இருக்கும். எனினும், வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்ப, சில காலம் ஆகும். மொத்த விலை வர்த்தகத்தில், அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரி, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சியில் பாதிப்பு இருக்காது.
விவேக் காம்பீர், நிர்வாக இயக்குனர், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்: இந்தாண்டு, நுகர்வோர் பொருள் துறைக்கு மோசமான ஆண்டாக அமைந்து விட்டது. பருவ மழைக்கு பின், சிறப்பான வளர்ச்சி இருக்கும் என, எதிர்பார்த்த நிலையில், பண மதிப்பு நீக்கம், தற்காலிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலும், நடப்பு நிதியாண்டில், இத்துறை, குறைந்தபட்சம், ஒற்றை இலக்க அளவிலாவது வளர்ச்சி காண்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
பின்னடைவு:சஞ்சீவ் பூரி, தலைமை செயல் அதிகாரி, ஐ.டி.சி.: பண மதிப்பு நீக்கத்தால், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், நுகர்வோர், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், ‘பிராண்டு’ உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என, அனைத்து தரப்பினரும், இடர்பாடுகளை சந்தித்துள்ளனர். அதனால், நுகர்பொருள் துறையில் வளர்ச்சி இருக்காது. ஒரு சில நுகர்பொருட்களின் வளர்ச்சியில், பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புண்டு. அதே சமயம், இந்த தற்காலிக சவால்களை சமாளித்து, இத்துறை வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
பெரும்பான்மையான நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், வளர்ச்சி பாதிக்கும் என, கருத்து தெரிவித்துள்ள நிலையில், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், அதன் ஆயுர்வேத பொருட்களின் விற்பனை, வழக்கத்தை விட, அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|