பதிவு செய்த நாள்
22 டிச2016
23:42

புதுடில்லி : ‘‘இந்திய மருந்து நிறுவனங்கள், பல்வேறு சோதனைகளுக்கு இடையிலும், சிறப்பாக செயல்பட்டு வருகின்றன,’’ என, இந்திய மருந்து நிறுவனங்கள் கூட்டமைப்பின் செகரட்டரி, ஜெனரல் திலிப் ஜி.ஷா தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: உள்நாட்டு மருந்து துறை, இரு முக்கிய பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இத்துறைக்கும், அரசுக்கும் இடையிலான நம்பிக்கையின்மை அதிகரித்து உள்ளது. அதை சரி செய்வதற்கான இருதரப்பு பேச்சிலும், முன்னேற்றம் ஏதுமில்லை என்பது தான் வேதனை. இந்தாண்டு மார்ச்சில், 344 கலவை மருந்துகளின் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை, மருந்து நிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தது. மத்திய அரசின், தன்னிச்சையான இந்த முடிவை எதிர்த்து, மருந்து நிறுவனங்கள், டில்லி ஐகோர்ட்டில் முறையிட்டு, நிவாரணம் பெற்றுள்ளன. அது போல, மருந்துகளின் விலைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதும், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களை பாதித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும், விலை மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் காரணமாக, 400 மருந்து நிறுவனங்கள், நீதிமன்றத்தை நாடியுள்ளன. மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடையால், பல நிறுவனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும், கடந்த நவ., வரையிலான ஓராண்டில், மருந்து துறை, இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், மருந்து நிறுவனங்கள் சந்தித்த பிரச்னைகளால், இதே வளர்ச்சி, நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், தொடருமா என, தெரியவில்லை.
அதே சமயம், இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி நன்கு இருக்கும் என, தெரிகிறது. இதற்கு, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தரமான, பாதுகாப்பான, நியாயமான விலையில் மருந்துகளை இறக்குமதி செய்ய விரும்புவது தான் காரணம். அத்தகைய தகுதிகள், இந்தியாவின் மூல மருந்துகளுக்கு உள்ளதால், அவற்றுக்கான தேவை, வளர்ந்த நாடுகளில் அதிகரித்து வருகிறது.
வளர்ந்த நாடுகள், ஆரோக்கிய பராமரிப்பு செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இது, இந்திய மருந்து நிறுவனங்களுக்கு, சிறப்பான வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மருந்து துறையில், அரசு அனுமதி சாரா பிரிவில், அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை, 74 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியிருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய மருந்து நிறுவனங்களில், அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. அது போல, இந்திய மருந்து நிறுவனங்களும், வெளிநாட்டு மருந்து நிறுவனங்களை கையகப்படுத்தி, வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|