பதிவு செய்த நாள்
30 டிச2016
23:29

புதுடில்லி : அதிகரித்துள்ள வாராக்கடன், குறைந்துள்ள கடன் வளர்ச்சி போன்றவற்றால், அடுத்த ஆண்டும், வங்கித் துறையில் மந்த நிலை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நவ., 8ல், உயர் மதிப்புள்ள பணம் செல்லாது என, அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த இரு மாதங்களாக, வங்கிகள், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதற்கே முக்கியத்துவம் அளித்து வந்தன. இதனால், வங்கிகளின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பணத் தட்டுப்பாட்டால், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிகளுக்கு கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடனை திரும்பச் செலுத்த, ரிசர்வ் வங்கி, 90 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. எனினும், தொழில் துறையின் மந்த நிலையால், வங்கிகளிடம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவது குறைந்துள்ளது. இதனால், வங்கிகளின் கடன் வளர்ச்சியும் சரிவடைந்து உள்ளது. இது போன்ற காரணங்களால், நடப்பு நிதியாண்டில், வங்கிகளின் இழப்பு அதிகரிக்கும்.
கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, 27 வங்கிகளில், 14 வங்கிகள், 34,142 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், ஏப்., – செப்., வரையிலான முதல் காலாண்டு வரை, இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதே காலத்தில், வங்கிகளின் மொத்த வாராக்கடன், 80 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து, 6,30,323 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், வங்கிகளின் வாராக்கடன், நடப்பு மூன்றாவது காலாண்டில் மட்டுமின்றி, நான்காவது காலாண்டிலும் அதிகரிக்கும் என, தெரிகிறது.
வசதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாதோர் பிரிவிலும், வங்கிகளின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. இப்பிரிவின் கடன், கடந்த நிதியாண்டில், 28.5 சதவீதம் அதிகரித்து, 76,685 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, நடப்பு நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், ‘டிபாசிட்’ செய்வது, நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. அவ்வாறு தளர்த்தப்பட்டால், மேலும் அதிக நெருக்கடியை சந்திக்க நேரும் என, வங்கிகள் அஞ்சுகின்றன. ஏற்கனவே, ரிசர்வ் வங்கி வழக்கத்தை விட குறைவான தொகை வழங்குவதால், நிர்ணயிக்கப்பட்ட தொகையை கூட, வாடிக்கையாளருக்கு வழங்க முடியாத நிலையில் வங்கிகள் உள்ளன. அதனால், கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த வேண்டும் என, வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|