பதிவு செய்த நாள்
21 ஜன2017
06:04

புதுடில்லி : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகளால் ஏற்படக் கூடிய தாக்கம் குறித்து, அவரிடம் நேரடியாக விளக்க, ‘நாஸ்காம்’ எனப்படும், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘இந்தியா, சீனா போன்ற நாடுகளால் பறிபோன உள்நாட்டு வேலைவாய்ப்புகள், திரும்பக் கொண்டு வரப்படும்; வெளிநாட்டு பணியாளர்களுக்கான, ‘எச் 1பி’ விசாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’ என, டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.அவர், அமெரிக்க அதிபராக நேற்று பொறுப்பேற்றதை அடுத்து, தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்த கொள்கைகளை அமல்படுத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், அமெரிக்க நிறுவனங்களுக்கும், அவற்றுக்கு பணிகளை செய்து தரும், இந்தியாவின், பி.பி.ஓ., நிறுவனங்கள், மென்பொருள் சேவைகளை வழங்கும், ஐ.டி., நிறுவனங்கள் ஆகியவை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இது குறித்து, ‘நாஸ்காம்’ தலைவர் சந்திரசேகர் கூறியதாவது: அமெரிக்காவில், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், 4.11 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன; அவற்றில், 1.50 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் ஆகும். அத்துடன், அமெரிக்க அரசுக்கு வரி செலுத்துவது, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு செலவிடுவது உள்ளிட்டவற்றின் மூலம், அமெரிக்க பொருளாதாரத்திற்கும், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.
இந்திய, ஐ.டி.,நிறுவனங்களின் சிறப்பான பங்களிப்புகளையும், அவற்றின் பல்வேறு பரிமாணங்களையும், டொனால்டு டிரம்ப் அரசில் அங்கம் வகிக்கும் புதியவர்கள் முழுமையாக அறியாமல் இருக்கக் கூடும்.‘அடுத்த ஆண்டு, ஐ.டி., துறையில், 10 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள், நிரப்பப்படாமல் இருக்கும்’ என, அமெரிக்க அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.அமெரிக்காவில்,‘ஸ்டெம்’ எனப்படும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை சார்ந்த வல்லுனர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. வெளிநாட்டு வல்லுனர்கள் மூலமாகத்தான், இந்த பற்றாக்குறை சரிசெய்யப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க அரசின் விசா கட்டுப்பாடுகள், அந்நாட்டு நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். அவை, உள்நாட்டு வல்லுனர்களை அதிக ஊதியத்தில் பணியமர்த்துவதால், அவற்றின் செலவினம் கூடும். இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து, டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து, விரிவாக விளக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நாஸ்காம் குழு, பிப்ரவரி அல்லது மார்ச்சில், அமெரிக்க செல்ல முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|