பதிவு செய்த நாள்
27 ஜன2017
13:11

புதுடில்லி,: வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள், பிப்ரவரி இறுதியில், முழுமையாக நீங்கி விடும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
பிரதமர், நரேந்திர மோடி, கடந்தாண்டு, நவ., 8ம் தேதி, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார்.இதையடுத்து, வங்கிகள், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க, ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஏ.டி.எம்., களில், ஒரு நாளைக்கு, 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது. பின், இந்த வரம்பு, 2,500 ஆக உயர்த்தப்பட்டது.
அதேபோல், வங்கியில், ஒரு வாரத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம் என விதிக்கப் பட்டிருந்தது. பின், 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், வங்கி மற்றும் ஏ.டி.எம்., களில் கூட்டம் அலைமோதியது. பல ஏ.டி.எம்.,கள், பணம் இல்லாமல் மூடப்பட்டன. பின், படிப்படியாக நிலைமை மாறியது.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், 50 நாட்கள் முடிந்த நிலையில், ஏ.டி.எம்.,களில், ஒருநாளைக்கு, 4,500 ரூபாய் வரை எடுக்கலாம் என, ரிசர்வ் வங்கி, டிச., 30ல் தெரிவித்தது. ஆனால், வங்கியிலிருந்து பணம் எடுப்பதற் கான கட்டுப்பாடு தளர்த்தப்படவில்லை. பின், ஏ.டி.எம்.,களில், தினமும், 10 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க லாம் என, ரிசர்வ் வங்கி, ஜன., 16ல்அறிவித்தது.
ஆனால், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், ஒரு வாரத்தில், 24 ஆயிரம் ரூபாய் வரையிலும், நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் எடுக்கலாம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்தது.இந்த நிலையில், வங்கி, ஏ.டி.எம்., களில், பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகள், பிப்ரவரி இறுதியில், முழுமையாக நீங்கி விடும் என, வங்கிநிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மஹாராஷ்டிரா வங்கி யின் செயல் இயக்குனர், ஆர்.கே.குப்தா கூறகையில்,''பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் 15 தேதிக்குள், வங்கி, ஏ.டி.எம்.,களில், பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை, ரிசர்வ் வங்கி, முழுமையாக நீக்கிவிடும் என, நம்புகிறேன்.
நிலைமையை முற்றிலும் ஆய்வு செய்து, ரிசர்வ் வங்கி தான் இறுதி முடிவெடுக்கும்,'' என்றார். ஸ்டேட் வங்கியின் ஆய்வு அறிக்கையில், 'பிப்ரவரி இறுதிக்குள், பண தட்டுப்பாடு, 90 சதவீதம் நீங்கிவிடும்' என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
மீண்டும் ஒரு வாய்ப்பு
செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ள, மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க, அரசும், ரிசர்வ் வங்கிஆலோசித்து வருகின்றன. செல்லாது என அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கி கணக்கில் செலுத்தி மாற்றிக் கொள்வதற்கான அவகாசம், டிச., 30ல் முடிந்தது.
இந்த நிலையில், பலர், 'இப்போது தான் பார்க்க நேர்ந்தது; அதை மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத் துள்ளனர். இதையடுத்து, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இது பற்றி ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதுவும், அதிகபட்சமாக, 2,000 ரூபாய் வரை மட்டும் மாற்றி கொள்ள அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை, அதிகபட்சமாக, ஏழு நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும்' என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|