பதிவு செய்த நாள்
27 மார்2017
03:09

பழைய வட்டி விகித முறையில், வீட்டுக்கடன் பெற்றவர்கள், எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலான வட்டி விகித முறைக்கு மாறுவதை, பரிசீலிக்கலாம் என, வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
புதிதாக வீட்டுக்கடன் பெற விரும்புகிறவர்களும், ஏற்கனவே வீட்டுக்கடன் பெற்றவர்களும், எப்போதுமே வட்டி விகிதம் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், வட்டி விகித போக்கு கடனுக்கான வட்டி விகிதத்தை தீர்மானிப்பதோடு, மாதத்தவணை தொகையையும் தீர்மானிக்கும். தற்போதைய நிலையில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், முன்னணி வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தன. ஆனால், குறைந்த வட்டி விகித சூழலில் பலனை புதிதாக கடன் பெறுபவர்களே அனுபவிக்கும் நிலை உள்ளது.
எம்.சி.எல்.ஆர்., முறைஒரு சில வங்கிகள் புதிய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்கின்றன. பழைய வாடிக்கையாளர்களை பொறுத்தவரை அதிக வட்டி விகிதமே தொடர்கிறது.பொதுவாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் வங்கிகளுக்கு இடையே மாறக்கூடியது தான். ஆனால், ஒரே வங்கியில் கடன் பெற்றவர்கள் இடையே கூட மாறுபட்ட வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. வாகனக் கடன், தனிநபர்களுக்கும் இது பொருந்தும். ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும், புதிதாக கடன் பெறுபவர்களுக்கும் மாறுபட்ட வட்டி விகிதம் பின்பற்றப்படுவதே இதற்கு காரணம்.
கடன் வழங்குவதற்கான வட்டி விகிதத்தை வங்கிகள் எம்.சி.எல்.ஆர்., எனப்படும், ‘மார்ஜினல் காஸ்ட் பேஸ்டு லெண்டிங் ரேட்’ அடிப்படையில் வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த முறையை வங்கிகள் பின்பற்றி வருகின்றன. வங்கிகளுக்கான குறுகிய கால கடன் விகிதமான, ‘ரெப்போ ரேட்’ குறைக்கப்படும் போது, அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், எம்.சி.எல்.ஆர்., முறை கொண்டு வரப்பட்டது. அதற்கு முன், ‘பேஸ் ரேட்’ அடிப்படையிலான முறை பின்பற்றப்பட்டது. அதற்கு முன், ‘பிரைம் லெண்டிங் ரேட்’ முறை பின்பற்றப்பட்டது.
வங்கிகள் வட்டி விகிதம் உயரும் போது, மாறும் வட்டி விகித கடனுக்கான வட்டி விகிதத்தையும் உடனே உயர்த்தி விடுகின்றன என்றாலும், அதே வேகத்தில் வட்டி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில்லை எனும் கருத்து நிலவியது. இதை சீராக்கும் வகையிலேயே ரெப்போ விகித மாற்றத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு பலன் அளிக்க வழி செய்யும், எம்.சி.எல்.ஆர்., முறை அமல் செய்யப்பட்டுள்ளது.
மாறும் வசதிபுதிதாக கடன் பெறும் வாடிக்கையாளர்கள் அனைவரும் எம்.சி.எல்.ஆர்., முறையில் தான், கடன் பெறுகின்றனர். எனவே, தற்போதைய சூழலுக்கு ஏற்ப வட்டி விகிதம் குறைவாக உள்ளது. ஏற்கனவே கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பழைய பேஸ் ரேட் முறையிலான வட்டி விகிதமே தொடர்கிறது. எனினும், பழைய வாடிக்கையாளர்கள் விரும்பினால் புதிய முறைக்கு மாறிக்கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதிக வட்டி விகிதத்தில் தொடர்வதாக உணர்பவர்கள், புதிய முறைக்கு மாறுவதன் மூலம், வட்டி விகிதத்தை குறைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் கடனுக்கான மாதத்தவணையும் குறையும் வாய்ப்புள்ளது.
உதாரணத்திற்கு, 15 ஆண்டு கால அளவில், 50 லட்சம் கடன் நிலுவைத்தொகை உள்ள ஒருவர், மாற்றத்தின் மூலம், ஒரு சதவீதம் வட்டி குறைக்கப்பட்டால் கூட, மாதத் தவணையில், 2,950 ரூபாய் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. ஆனால், இந்த மாற்றத்திற்கு கட்டணம் உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
குறைக்கும் வசதிஏற்கனவே கடன் பெற்றவர்கள் அதிக வட்டி விகிதம் கொண்டிருப்பதாக உணர்ந்தால், தற்போதுள்ள முறைக்கு மாறுவது பற்றி பரிசீலிக்கலாம் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். ரிசர்வ் வங்கி அண்மை மாதங்களில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. எனினும், தற்போதைய சூழலில் இருந்து வட்டி விகிதம் உடனடியாக உயர வாய்ப்பில்லை என, வல்லுனர்கள் கருதுகின்றனர். ஓராண்டு காலத்தில் குறையும் வாய்ப்பிருப்பதாகவும் கருதப்படுகிறது. எனவே, மாற்றத்தை பரிசீலிக்க இது ஏற்ற நேரமாகும். ஆனால், வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டால் புதிய முறையில் கடனுக்கான வட்டி விகிதமும் உயரும்.
வட்டி விகிதத்தை மாற்ற விரும்புகிறவர்கள், நிலுவையில் உள்ள கடன் தொகை, வட்டி விகிதம், மாற்றத்தால் கிடைக்க கூடிய பலன் ஆகியவற்றை கணக்கிட்டு, ஏற்கனவே உள்ள சூழலோடு ஒப்பிட்டு முடிவு எடுக்க வேண்டும். மாற்றத்திற்கான, ‘ரிசெட்’ கட்டணம் உண்டு என்பதால் அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனினும், இதை குறைக்க அல்லது தள்ளுபடி செய்யவும் வங்கிகளிடம் வலியுறுத்தும் வாய்ப்புள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|