பதிவு செய்த நாள்
27 மார்2017
03:18

மும்பை : இந்தியர்களுக்கு, வளமான வாழ்க்கை குறித்து ஏராளமான கனவுகள் இருந்தாலும், அவற்றை நனவாக்குவதற்கான நிதி வளத்தை திட்டமிட்டு பெருக்குவதில் அவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அவிவா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், இந்தியர்கள் எவ்வாறு தங்கள் நிதி வளத்தை திட்டமிட்டு செயல்படுத்துகின்றனர் என்பது குறித்து, நாட்டின், 8 முக்கிய நகரங்களில், ஆய்வு மேற்கொண்டது. இதற்கு, மக்களின், வருங்கால வாழ்க்கை குறித்த கனவும், அதை நனவாக்க அவர்கள் எத்தகைய முறையில் நிதியாதாரத்தை பெருக்க முயற்சி மேற்கொள்வர் என்ற இரு அம்சங்கள் அளவீடாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விபரம்: உலகளவில், பல்வேறு துறைகளில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அதில் எந்த ஐயமும் இல்லை. அதேசமயம், இந்தியர்கள், தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்து கனவுக்கு ஏற்ப, தங்கள் நிதி செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இதற்கு, மக்களிடம் நிதி, முதலீடு உள்ளிட்டவை சார்ந்த கல்வியறிவு மிகக் குறைவாக உள்ளது தான் முக்கிய காரணம்.
ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோருக்கு, தங்கள் வாழ்கை லட்சியத்தை அடைய, எத்தகைய முறையில், நிதியை நிர்வகிக்க வேண்டும் என, தெரியவில்லை. அதேசமயம், 25 – 29 வயதுள்ளோருக்கு, முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு உள்ளது. திட்டமிட்டு நிதியை பராமரிப்பதில், அவர்களின் பங்கு, ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களின் மதிப்பீட்டை விட, 25 சதவீதம் அதிகமாக உள்ளது.
நிதியை திட்டமிடுவதில், பெண்கள், ஆண்களை விஞ்சி நிற்கின்றனர். குழந்தைகள் உள்ள தம்பதியரை விட, குழந்தைகள் இல்லாத தம்பதியர், நிதி நிர்வாகத்தில் சிறப்பாக செயல்படுகின்றனர்.அதிக வருவாய் உள்ளோர் தான், திட்டமிட்டு செயல்பட்டு, நிதி வளத்தை பெருக்கிக் கொள்வதாக, பொதுவான கருத்து உள்ளது. ஆனால், இந்த ஆய்வில், அவ்வாறு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்போர் கூட, நிதியை திட்டமிடுவதில் சரிவர செயல்படாமல் உள்ளனர். அவர்களின் பங்கு, திட்டமிட்டு நிதி செயல்பாடுகளை வகுப்போருடன் ஒப்பிடுகையில், 5 சதவீதம் குறைவாக உள்ளது. இந்த ஆய்வில், வட மாநிலங்களில் வசிப்போரை விட, தென் மாநிலங்களில் உள்ளோர், நிதி நிர்வாகத்தில் மேம்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
எதிர்கால வாழ்க்கையை வளமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற பெரிய கனவு, எல்லோருக்கும் உள்ளது. அதை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துக் கொள்வது அவசியம். அதற்கு, ஒவ்வொருவரும், தங்கள் நிதியாதாரத்தை பெருக்க, திட்டமிட்டு செயல்பட வேண்டும். அத்தகைய முயற்சி, அவர்களின் வருங்கால கனவை நனவாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|