பதிவு செய்த நாள்
10 ஏப்2017
07:46

புதுடில்லி : 'இந்தியாவில், இணையதளம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி, 2020ல், இரு மடங்கு உயர்ந்து, 25 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும்' என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இணையத்தின் வளர்ச்சி குறித்து, பாஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் இந்தஸ் என்டர்பிரைனர்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளன.
அதன் விபரம் :இந்தியாவில், இணையத்தின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு, 'இ – காமர்ஸ்' எனப்படும், வலைதளம் சார்ந்த வர்த்தகம் மற்றும் நிதிச் சேவைகள் முக்கிய காரணிகளாக உள்ளன. உதாரணமாக, 2020ல், 'டிஜிட்டல் பேமன்ட்' எனப்படும், மின்னணு பணப் பரிவர்த்தனைகள், இரு மடங்கு உயர்ந்து, 30 – 40 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மின்னணு தொழில்நுட்பம், மக்கள் சார்ந்த, பல்வேறு சமூக நல செயல்களின் பயன்பாட்டிற்கு உதவுகிறது. மிகச் சுலபமாக தொழில் புரிய துணை நிற்கிறது. எண்ணற்ற சேவைகள் மற்றும் பொருட்களை எளிதாக அணுகி, பெற உதவுகிறது. அனைத்து துறைகளிலும், இணையத்தின் பங்களிப்பு அத்தியாவசிமாக உள்ளது.
இணைய தொழில்நுட்பத்தில், அடுத்த கட்டமாக, 'இன்டர்நெட் ஆப் திங்ஸ்' எனப்படும் சாதனங்கள் இடையிலான இணைய பயன்பாடு பெருகி வருகிறது. இதையும் தாண்டி, ' இன்டெர்நெட் ஆப் எவ்வரி திங்ஸ்' எனப்படும், அனைத்து பயன்பாட்டிலும், இணையம் தவிர்க்க முடியாத அங்கமாக உருவெடுக்கும். அத்தகைய சூழலில், எண்ணற்ற துறைகளில் பெருகும் எண்ணிலடங்காக வர்த்தகங்கள், இந்தியாவின் பொருளாதார வெற்றிக்கு உதவும்.இத்தகைய எழுச்சிக்கு, மொபைல்போன் வாயிலான இணைய பயன்பாடு, மிகவும் இன்றியமையாத வகையில் துணை நிற்கும் எனலாம். உலகளவில், தற்போது, மொபைல்போன் மூலம் இணையம் பயன்படுத்துவோர் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு, 39 கோடி பேர், மொபைல்போன் மூலம், இணையத்தில் உலா வருகின்றனர். இது, 2020ல், 65 கோடியாக உயரும்.
இதே காலத்தில், மொபைல்போனில், 'டேட்டா' எனப்படும் தகவல்கள், படங்கள் போன்றவற்றின் பரிமாற்றத்தில் ஈடுபடுவோர், 10 – 14 மடங்கு பெருகுவர். மொபைல்போனில் அதிவேகமாக இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 55 கோடியாக உயரும். ஒருவர், மாதம், சராசரியாக, 7 – 10 ஜி.பி., அளவிற்கு மொபைல்போனில் தகவல்களை பரிமாறிக் கொள்வார். இது, தற்போது, 1ஜி.பி.,க்கும் குறைவாக உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், '4ஜி' மொபைல்போன்களின் எண்ணிக்கை, 6 மடங்கு உயர்ந்து, 55 கோடியாக பெருகும். இது, பயன்பாட்டில் உள்ள மொபைல்போன்களில், 70 சதவீதமாக இருக்கும்.
மொபைல்போனில் இணைய வசதிக்கான கட்டணம் குறைந்து வருவதாலும், அதன் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இத்துடன், படங்களின் துல்லியத்தை அதிகரிக்கும் வகையில் வெளியாகும், மேம்பட்ட திறன் கொண்ட மொபைல்போன்களும், இணைய பயன்பாட்டை அதிகரிக்கச் செய்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், 2020ல், இணைய பொருளாதாரம், இரு மடங்கு உயர்ந்து, 25 ஆயிரம் கோடி டாலரை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|