பதிவு செய்த நாள்
11 ஏப்2017
02:53

புதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சி சூடுபிடிக்கும் என, பல்துறை நிறுவனங்கள் தெரிவித்ததை அடுத்து, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், சி.ஐ.ஐ., அமைப்பின், ‘வணிக நம்பிக்கை குறியீடு’ 64.1 புள்ளிகளாக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழிலக கூட்டமைப்பு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின், வணிகம், விரிவாக்கத் திட்டங்கள், முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக, காலாண்டுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்கிறது. இந்த வகையில், இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டின், 98வது வர்த்தக சூழல் ஆய்வறிக்கையை, சி.ஐ.ஐ., வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 200க்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள், இந்த ஆய்வில் பங்கேற்றன. அவற்றில், 63 சதவீத நிறுவனங்கள், மதிப்பீட்டு காலாண்டில், விற்பனை உயரும் என்ற எதிர்பார்ப்பால், வர்த்தக சூழல் மேம்படும் என, தெரிவித்துள்ளன. முந்தைய அக்., – டிச., காலாண்டில், 39 சதவீத நிறுவனங்கள் மட்டுமே, வர்த்தகம் வளர்ச்சி காணும் என, தெரிவித்திருந்தன. இதே காலத்தில், புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும் என, தெரிவித்த நிறுவனங்களின் பங்கு, 41 சதவீதத்தில் இருந்து, 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஏற்றுமதி ஆர்டர்களில் மாற்றமிருக்காது என்ற போதிலும், தொழில் வளர்ச்சிக்கு, உள்நாட்டு ஆர்டர்கள் கை கொடுக்கும் என, 61.8 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன.தற்போதைய சூழலில், முதலீடுகள் அவசியம் என தெரிவித்துள்ள நிறுவனங்கள், மதிப்பீட்டு காலாண்டில், அவற்றின் உற்பத்தி அதிகரிக்கும் என, எதிர்பார்ப்பதாக கூறியுள்ளன.இந்த ஆய்வில், 65 சதவீத நிறுவனங்கள், மதிப்பீட்டு காலாண்டில், அவற்றின் உற்பத்தி திறன், 75 சதவீத அளவிற்கு பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளன; இது, 2016, அக்., – டிச., காலாண்டில், 36 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.
உற்பத்தி திறன் அதிகரித்த போதிலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முதலீட்டு திட்டங்கள் எதையும் மேற்கொள்ளப் போவதில்லை என, பெரும்பாலான நிறுவனங்கள் கூறியுள்ளன.உள்நாட்டு முதலீடுகளை பொறுத்தவரை, அதிகரிக்கவோ, குறைக்கவோ போவதில்லை என, 50 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அடுத்த ஆறு மாதங்களுக்கு, உள்நாட்டு தேவைப்பாடு குறைவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, சர்வதேச பொருளாதார மந்தநிலை, விளைபொருட்களின் விலை உயர்வு போன்றவை தான் முக்கிய கவலை என, பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கருத்துக்களின் அடிப்படையில், பல காலாண்டுகளாக குறைந்து காணப்பட்ட, ‘வணிக நம்பிக்கை குறியீடு’ மதிப்பீட்டு காலாண்டில், 64.1 புள்ளியாக, புதிய உச்சத்தை எட்டியுள்ளது; இது, முந்தைய, அக்., – டிசம்பர் காலாண்டில், 56.5 புள்ளியாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|