பதிவு செய்த நாள்
21 ஏப்2017
23:56

புதுடில்லி : ‘‘உலக நாடுகள் வர்த்தகம் புரிவதற்கு, விதிமுறைகள் உள்ளது போன்று, சேவைகள் சார்ந்த வர்த்தக நடைமுறைக்கும், பொது விதிகளை வகுக்க, உலக வர்த்தக அமைப்பிடம், இந்தியா தீவிரமாக வலியுறுத்தும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற நாடுகள், மண்ணின் மைந்தர்களுக்கே வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்துவதற்கான, ‘விசா’ கட்டுப்பாடுகளை கடுமையாக்கிஉள்ளன. இதனால், இந்தியர்கள், வெளிநாடுகளுக்கு பணிக்குச் செல்வது குறையும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்படும் நிலை எற்பட்டுள்ளது.
இது குறித்து, அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் பேசியதாவது: கணினி வல்லுனர்களை பணிக்கு அமர்த்துவதை கட்டுப்படுத்த, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விசா விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளன. இதன் மூலம், சேவைகள் சார்ந்த வர்த்தகத்தில், சாமர்த்தியமாக பாதுகாப்புரிமை அரண்களை எழுப்பிஉள்ளன. அதனால், சேவைகள் துறை சார்ந்த வர்த்தகத்திற்கு, சர்வதேச விதிமுறைகளை வகுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
இந்தியா, தீவிரமாக செயல்பட்டு, இது தொடர்பான ஒப்பந்தத்தை, உலக வர்த்தக அமைப்பில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும். ஒப்பந்த ஷரத்துகளில், வல்லுனர்கள் பரிமாற்றம் தொடர்பான விதிகளை தளர்த்துவது, சேவைகள் துறை வளர்ச்சி காண, பரிவர்த்தனை செலவுகளை குறைப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும். வரும் டிசம்பரில், அர்ஜென்டினாவில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், இது குறித்து விவாதிக்கப்படும். சேவைகள் துறை சார்ந்த வர்த்தகம் ஏன் முறைப்படுத்தப்படாமல் உள்ளது என்பது குறித்து, சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என, உலக வர்த்தக அமைப்பிடம், இந்தியா ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விசா பிரச்னையை, உலக வர்த்தக அமைப்பின் குறை தீர்ப்பாயத்திற்கு எடுத்துச் செல்லாமல், ஆக்கபூர்வமான முறையில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. அதே சமயம், எத்தகைய பாரபட்சமான அணுகுமுறையையும், இந்தியா ஏற்காது. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில், இந்திய நிறுவனங்கள் உள்ளது போன்று, இந்தியாவிலும், அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் உள்ளன. அந்நிறுவனங்கள் ஈட்டும் வருவாய், லாபம் எல்லாம், அமெரிக்காவிற்குச் செல்கிறது. அதனால், விசா கட்டுப்பாடு, இந்திய நிறுவனங்களை மட்டும் பாதிக்கும் எனக்கூற முடியாது. அமெரிக்காவிற்கும் பாதிப்பு ஏற்படும்.
-நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தகம் – தொழில் துறை அமைச்சர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|