பதிவு செய்த நாள்
10 மே2017
07:04

புதுடில்லி : இந்தியாவிலேயே, முதன்முறையாக, ஹரியானாவில், 900 கோடி ரூபாய் முதலீட்டில், ‘ஆட்டோ வில்லேஜ்’ என்ற, வாகன துறையின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய, வாகன கிராமம் அமைய உள்ளது.இங்கு, 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களின், 80 விற்பனை மையங்கள் இடம் பெறும். இவற்றில், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், கார், வர்த்தக வாகனம், டிராக்டர் உட்பட, பலதரப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்யப்படும். மேலும், வாகன கடன் தரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கிளைகளும், இந்த கிராமத்தில் அமைய உள்ளன.
அத்துடன், வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதற்கான, சோதனை வழித்தடங்கள், வாங்கிய வாகனத்தை உடனடியாக பதிவு செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவையும் இடம் பெற உள்ளன. புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த, பிரம்மாண்ட கூடம், வாகன பழுது பார்ப்பு மையங்கள், பெட்ரோல் நிலையங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றுடன், பொழுது போக்கு பூங்காவும், இந்த கிராமத்தில் அமைய உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகிலேயே, கூடுதலாக, 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், குடியிருப்பு பகுதியும் உருவாக்கப்பட உள்ளது. வாகன கிராமத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோருக்காக, இந்த குடியிருப்பு ஏற்படுத்தப்படுகிறது.
இது குறித்து, ‘ஆட்டோ வில்லேஜ்’ நிறுவனத்தின் இயக்குனர் ஹிமான்ஷூ நாராயண் கூறியதாவது: நகர்ப்புறங்களில், வாகன விற்பனை நிலையம் அமைக்க, இடம் கிடைப்பது கடினமாக உள்ளது; வாடகையும் அதிகமாக இருக்கிறது. வெவ்வேறு நிறுவனங்களின் வாகனங்களை பார்வையிட்டு, தேர்வு செய்ய, பல இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வாக, டில்லியில் இருந்து, 100 கி.மீட்டருக்குள் அமைய உள்ள, ஆட்டோ வில்லேஜ் விளங்கும். ‘இத்திட்டத்திற்கு, ஒரு மாதத்தில் அனுமதி அளிக்கப்படும்’ என, ஹரியானா அரசு உறுதி அளித்துள்ளது.
அத்துடன், வாகனத்திற்கான, ‘வாட்’ வரி, வாகன பதிவு கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கவும், அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நகர்ப்புறங்களில் வாகனம் வாங்குவோரை, வாகன கிராமத்திற்கு ஈர்க்க முடியும் என, நம்புகிறோம். இத்திட்டத்திற்கு நிலம் வழங்க, பலர் முன்வந்துள்ளனர். அடுத்த ஓரிரு மாதங்களில், வாகன கிராமத்தை உருவாக்கும் பணி துவங்க உள்ளது. வரும், 2019 இறுதிக்குள், அனைத்து பணிகளும் முடிவடைந்து, கிராமம் பயன்பாட்டிற்கு வரும். ஒரே நாளில், வாகனம் தொடர்பான அனைத்து பணிகளையும் முடித்துச் செல்வதற்கு ஏற்ற இடமாக, இந்த கிராமத்தை உருவாக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
காப்புரிமைஉ.பி., ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட மாநிலங்களும், இது போன்ற வாகன கிராமத்தை உருவாக்க விருப்பம் தெரிவித்து உள்ளன. ஹரியானாவைத் தொடர்ந்து, இதர மாநிலங்களிலும் களமிறங்க ஆலோசித்து வருகிறோம். வாகன கிராமத்திற்கு காப்புரிமை பெற உள்ளோம்.-ஹிமான்ஷூ நாராயண், இயக்குனர், ஆட்டோ வில்லேஜ் நிறுவனம்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|