பதிவு செய்த நாள்
13 மே2017
00:08

மும்பை : இந்தியாவில், பெண்கள் எளிதாக ஓட்டிச் செல்லும், கியர் இல்லாத ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு பெருகி வருவதால், விரைவில் அதன் விற்பனை, மோட்டார் சைக்கிளை விஞ்சும் என, வாகன துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்கூட்டர் விற்பனையில், எச்.எம்.எஸ்.ஐ., எனப்படும், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் கியர் இல்லாத, ‘ஆக்டிவா’ ஸ்கூட்டர், அலுவலகம் செல்லும் பெண்களுக்கும், கல்லுாரி மாணவியருக்கும் வரப்பிரசாதமாக உள்ளது. பாரம்பரிய ஸ்கூட்டர் போல், வேகமெடுக்கவும், வேகத்தை குறைக்கவும், கியர் மாற்ற அவசியமின்றி, ‘திராட்டில்’ மூலம், சுலபமாக செய்ய முடிவதால், கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் விற்பனை, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
கடந்த, 2012ல், இருசக்கர வாகன சந்தையில், ஸ்கூட்டர்களின் பங்கு, 19 சதவீதமாகவும், துவக்க நிலை, 110 சி.சி., மோட்டார் சைக்கிள்களின் பங்களிப்பு, 47 சதவீதமாகவும் இருந்தன.கடந்த மார்ச்சுடன் முடிந்த, 2016 – 17ம் நிதியாண்டில், ஸ்கூட்டர்களின் பங்கு, 32 சதவீதமாக உயர்ந்த நிலையில், மோட்டார் சைக்கிள்களின் பங்களிப்பு, 37 சதவீதமாக சரிவடைந்து உள்ளது. இதே காலத்தில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், ‘ஸ்பிளெண்டர்’ மோட்டார் சைக்கிள் விற்பனையை, முதன்முறையாக, ஹோண்டாவின், ‘ஆக்டிவா’ ஸ்கூட்டர் விஞ்சி, சாதனை படைத்தது.
இந்நிலையில், நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், ஏப்ரல் மாதம் இருசக்கர வாகன சந்தையில், ஸ்கூட்டர்களின் பங்கு, 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம், மோட்டார் சைக்கிள் விற்பனை, 36 சதவீதமாக குறைந்துள்ளது. வரும் மாதங்களில், இந்த 1 சதவீத வித்தியாசத்தை, ஸ்கூட்டர் அனாயசமாக கடந்து, ஒட்டுமொத்த அளவில், மோட்டார் சைக்கிள் விற்பனையை விஞ்சும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இருசக்கர வாகன சந்தையில், ஸ்கூட்டர் பங்களிப்பு அதிகரிக்க, ஹோண்டா நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை, ஏப்ரலில், 40 சதவீதம் அதிகரித்து, 3,68,55 ஆக உயர்ந்துள்ளது. கியர் இல்லாத ஸ்கூட்டர் விற்பனையில், இந்நிறுவனம், 89 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ஒட்டு மொத்த ஸ்கூட்டர் சந்தையில், 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில், 63 சதவீதத்தை எட்டிப் பிடித்துள்ளது.
கிராமப்புறங்களில் கியர் இல்லாத ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அது போல, நகரங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும், ஹோண்டா ஸ்கூட்டர்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இருசக்கர வாகன சந்தையின் வளர்ச்சிக்கு, நிறுவனம் முக்கிய காரணியாக விளங்குகிறது. கூடிய விரைவில், மோட்டார் சைக்கிள் விற்பனையை, ஸ்கூட்டர்கள் விஞ்சும்.-யத்விந்தர் சிங் குலேரியா,மூத்த துணைத் தலைவர், விற்பனை பிரிவு, எச்.எம்.எஸ்.ஐ.,
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|